உலக அளவில் பாரதத்தின் மதிப்பும் மரியாதையும் வளர்கிறது; மோடி

டில்லி பல்கலைக்கழகத்தின் நுாற்றாண்டு நிறைவு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசியதாவது: டில்லி பல்கலைக்கழகம் என்பது வெறும் பல்கலை மட்டுமல்ல, அது ஒரு இயக்கம்.

இந்தியாவின் வளமான கல்வி முறையே நம் செழுமைக்கு காரணம். ஒரு காலத்தில் உலகின் மொத்த உற்பத்தியில் இந்தியாவின் பங்கு அதிகமாக இருந்தது. நாம் அடிமைப்பட்டு கிடந்த காலத்தில், நம் கல்வி நிலையங்கள் அழிக்கப்பட்டு, நாட்டின் அறிவுசார் வளர்ச்சியில் தடை ஏற்பட்டதுடன், நம் வளர்ச்சியும் தேக்க நிலையை அடைந்தது.

நாடு சுதந்திரம் பெற்ற பின் இந்த நிலை மாறியது. இந்திய பல்கலைகள், திறமையான இளைஞர்களுடன் ஒரு வலுவான தலைமுறையை உருவாக்கின. இதில் டில்லி பல்கலைக்கு முக்கியப் பங்கு உள்ளது. சர்வதேச அளவிலான சிறந்த பல்கலைக்கழகங்களை வரிசைப்படுத்தும், ‘கியூஎஸ் குளோபல் ரேங்கிங்’கின் சமீபத்திய பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்திய பல்கலைகளின் எண்ணிக்கை 12ல் இருந்து 45 ஆக உயர்ந்து உள்ளது.

புதிய இந்தியாவை உருவாக்கும், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ், என்.ஐ.டி., கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்தியாவின் திறன் வளர்ச்சி மற்றும் நம் இளைஞர்கள் மீது உலக அளவில் நம்பிக்கை உயர்ந்து வருவதால், நம் நாட்டின் மீதான உலகளாவிய மதிப்பும், மரியாதையும் வளர்ந்துள்ளன.

சமீபத்திய அமெரிக்க பயணத்தின் போது கையெழுத்தான ஒப்பந்தங்கள் வாயிலாக நம் இளைஞர்களுக்கு பல புதிய வாசல்கள் திறக்க உள்ளன. நம் இளைஞர்களுக்கு
இதுவரை கிடைத்திடாத தொழில்நுட்பங்கள் நம் கைகளுக்கு வர உள்ளன.

மைக்ரான் முதல் கூகுள் வரை பல்வேறு நிறுவனங்களும் நம் நாட்டில் பெரும் முதலீடுகளை செய்ய முன்வந்துஉள்ளன. கல்வித்துறையில் கடந்த சில ஆண்டுகளாக நாம் எடுத்து வரும் முடிவு களும், தொலைநோக்கு பார்வையுடன் கூடிய கொள்கைகளும் சர்வதேச அளவில் இந்திய பல்கலை களின் அங்கீகாரத்தை உயர்த்தி உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.