உலகின் குரு ஆகிட ஒத்திகை!

 

­”அறிவு அனைவருடன்  பகிர; செல்வம் ஊர் நன்மைக்காக; வலிமை எளியோரைக் காப்பதற்கு (‘ஞானாய தானாய ச ரக்ஷணாய’). இது தொன்றுதொட்டு பாரத நாட்டின் அணுகுமுறை.” என்று பிரதமர் மோடி பேசியதும் நாசாவ் கலாஸியம் என்ற அந்த நியூயார்க் அரங்கில் நிறைந்திருந்த பாரத வம்சாவளியினரான சகோதர சகோதரிகள்  விண்ணதிர ஆர்ப்பரித்தார்கள்.

பாரதம் பல்வேறு துறைகளிலும் நிகழ்த்தி வரும் சாதனைகளைப் பிரதமர் தன் உரையில் பட்டியலிட்டு, நம் நாட்டின் கலாச்சாரத் தூதுவர்களாக இவற்றை தலை நிமிர்த்தி உரக்கச் சொல்லுங்கள் என்றார். ‘உருவாகி வரும் அறிவியல்  தொழில் நுட்பத்துறை வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு வையத் தலைமை கொள்ள உங்களைத் தயார் படுத்திக்கொள்ளுங்கள்’ என்று குறிப்பால் உணர்த்தினார்.

மோடி நான்கு நாள் பயணமாக செப்டம்பரில் அமெரிக்கா சென்று திரும்பியுள்ளார். இந்த முறை முதலில் அவர் கலந்து கொண்டது குவாட் என்ற நான்கு (ஜப்பான், அமரிக்கா, ஆஸ்திரேலியா, பாரதம்) கூட்டமைப்பு  நாடுகளின் அதிபர்கள் சந்திப்பில். இது வெறும் ஆயுத ஒப்பந்தம் அல்ல. உலக சுகாதார / மருத்துவ நலன் மேம்பாடு, பேரிடர் காலங்களில் மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பணிகள், தேசங்களின் கடலோரப் பாதுகாப்புப் படைகள் மத்தியில் பரஸ்பர ஒத்துழைப்பு, எதிர்காலத் தேவைகளுக்கு ஒப்ப உயர்தர துறைமுக கட்டமைப்பு, கடலடியில் கேபிள் அமைத்து டிஜிட்டல் தகவல் பரிமாற்ற ஏற்பாடு, செயற்கை நுண்ணறிவை (ஏ.ஐ) பாதுகாப்பாக பயன்படுத்துவது என பல செயல் திட்டங்கள் விவாதிக்கப்பட்டன.

இந்த இடத்தில் இரண்டு விஷயங்களைக் கவனிக்க வேண்டும். குவாட் அமைப்பின் பணிக்கள விஸ்தரிப்பில் பாரத நாட்டின் பங்களிப்பு கணிசமானது. இது நேட்டோ போல இன்னொரு ஆயுத பாதுகாப்பு ஒப்பந்தமாக அமைந்து ஒரு காலகட்டத்தில் மற்ற நாடுகளை மிரட்டுவதற்கு வாய்ப்பாக அமைந்து விடக் கூடாது என்பதில் தொடக்க முதலே நாம் தெளிவாக இருக்கிறோம்.

இந்த ஆண்டு நடைபெற்ற அதிபர்கள் சந்திப்பு, டெல்லியில் தான் நடைபெற்றிருக்க வேண்டும். ஜோ பைடன் தன்னுடைய ஆட்சியின் கடைசி வாய்ப்பு என்பதால் அவர் விருப்பத்தின் அடிப்படையில் அங்கே நடந்தது. அடுத்த சந்திப்பு 2025ல் நம் நாட்டில் தான்.

ஐ.நா சபையின் ‘எதிர்காலத்திற்கான உச்சி மாநாடு’ம் நடந்தது. மோடி அங்கே பேசுகையில் “உயர்ந்த கொள்கைகளைப் பேசுவது மட்டும் போதுமா?, அதற்கேற்ற செயல்பாடுகள் உண்டா?” என்று கேட்டு  வளர்ந்த நாடுகளின்  பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைளில் காணப்படும் தொய்வு, – ஒரு சார்பு நிலைப்பாடு ஆகியவற்றை குத்திக் காட்டி குட்டும் வைத்தார்.