உயிர் உள்ளவரை போராட்டம் தொடரும் விவசாயிகள் அறிவிப்பால் நெருக்கடி

திருவண்ணாமலை, ‘சிப்காட்’ பிரச்னையில், உயிர் உள்ளவரை போராட்டத்தை தொடர்வதாக, ஜாமினில் விடுவிக்கப்பட்ட விவசாயிகள் அறிவித்துள்ளதால், அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மேல்மா கிராமத்தில், சிப்காட் விரிவாக்கத்திற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், 126 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தினர். சட்டசபை சிறப்பு கூட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து, 20 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்; ஏழு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், விவசாய சங்கங்கள், பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, ஆறு பேர் மீதான குண்டர் சட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

போராட்டத்தை ஒருங்கிணைந்து நடத்திய கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி அருள் மீதான குண்டர் சட்டம் விலக்கி கொள்ளப்படவில்லை. போலீசார் தொடர்ந்த வழக்கில், 20 விவசாயிகளுக்கும் ஜாமின் வழங்கப்பட்டது. இதில், அருள் ஆறுமுகத்தை தவிர மற்றவர்கள், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அதற்கு முன், சிறையில் உள்ள விவசாயிகளின் குடும்பத்தினருடன் ஆளும் கட்சியினர் ரகசிய பேச்சு நடத்தினர். இதனால், போராட்டம் முடிவிற்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், ‘குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள விவசாயி அருளை விடுவிக்க வேண்டும். அனைவரது மீதும் தொடுக்கப்பட்ட வழக்கை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

‘சிப்காட் விரிவாக்க திட்டத்தை கைவிட வேண்டும்’ என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். அத்துடன், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு வெளியேறிய விவசாயிகள், உயிர் உள்ளவரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர்.

அ.தி.மு.க.,விற்கு சென்னை – சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் போன்று, தி.மு.க.,விற்கு லோக்சபா தேர்தல் நேரத்தில், இது நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. இதனால், அரசு தரப்பினர் கலக்கத்தில் உள்ளனர். போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வரும் வகையில், முதற்கட்டமாக அங்குள்ள உயர் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து, சமரசம் செய்வதற்கான ஆலோசனையும் நடந்து வருகிறது.