நூற்றியெட்டு திவ்ய க்ஷேத்திரங்களில் ஒன்றான திருவல்லிக்கேணி, சென்னையின் மத்தியில் உள்ளது. அதன் நடுவே உள்ள பெரிய தெருவில் இயங்குகிறது ஹிந்து மேனிலைப் பள்ளி. 1852ல் துவங்கிய பள்ளி. கிட்டத்தட்ட 165 ஆண்டைக் கடந்த பாரம்பரியப் பள்ளி. இதன் முத்திரை மொழியே (Motto) ஸத்யம், ஞானம், அனந்தம், பிரம்மா“. கல்வி நிறுவனம் என்பதால் மட்டும் உள்ள புகழை விட அந்த நிறுவனம் பல துறைகளிலும் பிரபலங்களை உருவாக்கி பெயர் பெற்றிருக்கிறது. நல்ல ஒழுக்கத்தை மாணவர்களிடையே உருவாக்கிய பள்ளி. அந்தப் பள்ளிக்கு இஷ்ட தெய்வம் ராமன். அதனால்தான் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் ஹால் டிக்கெட், பூஜை செய்யப்பட்டு ஒரு ராமர் டாலருடன் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.
டி.எஸ். ராஜகோபாலன் என்பவர் முன்பு தலைமை ஆசிரியராக இருந்திருக்கிறார். அவரே 6ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு கணிதப் புத்தகங்கள் எழுதியிருக்கிறார். அந்தக் கணித நூல்தான் பல பள்ளிகளிலும் உபயோகப்படுத்தி வந்தார்கள். பிறகு விசேஷ கணிதம் (elective maths) என்று அறிமுகப்படுத்திய போது அதற்கும் கணிதப் புத்தகம் எழுதியிருக்கிறார். இந்தப் பள்ளியில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் புத்தகம் எழுதுவதிலும் வல்லவர்கள்.
புகழ்மிக்க பேச்சாளர் ஸ்ரீனிவாச சாஸ்திரி, கணிதமேதை ராமானுஜர் போன்றோரை உருவாக்கிய பள்ளி இது. அந்தப் பள்ளியில் படித்த எம்.ஜே. கோபாலன் என்பவர் சிறந்த கிரிக்கட், ஹாக்கி விளையாட்டு வீரர். அவர் பாரத நாட்டின் பிரதிநிதியாக வெளி நாடுகளில் சென்று விளையாடியிருக்கிறார். ஸ்ரீ ரங்கச்சாரி, எம்.ஓ. ஸ்ரீனிவாசன், டபுள்யூ.வி. ராமன் போன்ற கிரிக்கெட் வீரர்கள் இந்தக் கல்விச் சாலையில் படித்தவர்கள்.
புல்லாங்குழல் இசையில் புகழ்பெற்ற ரகு, ரவி இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள். இன்று பல பெரிய நிறுவனங்களின் பொறுப்பில் இருக்கும் சிலர் இந்தப் பள்ளியில் படித்தவர்கள். மேஜிக் இளவரசன் ரகுநாத் இந்தப் பள்ளி மாணவன். இப்படிப் பல பிரபலங்களை உருவாக்கிய இந்தப் பள்ளியின் சாதனைப் பட்டியல் நீண்டுகொண்டேயிருக்கின்றது.
பல பள்ளிகள் சென்னையில் துவங்க காரணமாக உள்ள இந்தக் கல்வி நிலையம், பல கல்வி அமைப்புகளுக்கு ஆலோசனைகள் வழங்கும் மையமாக திகழ்கிறது. பல பள்ளிகளுக்கு முன் மாதிரியாக நல்ல முன்னுதாரணமான மாணவர்களை பல துறைகளுக்கு உருவாக்கிக் கொடுத்த பெருமையும் இந்தப் பள்ளியைச் சாரும். இப்படி புகழ் பெற்ற கல்வி நிலையம் அதன் மாணவர்கள் மூலம் கிடைத்த புகழின் மூலம் புகழ்ச்சியில் சிகரத்தையே எட்டி பீடுநடை போட்டு வருகின்றது.