அனைத்து குடிமக்களும் ஒரேமாதிரியான சட்டத்தை பின்பற்றுவதற்காக பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு உருவாக்கியது. இதுகுறித்து ஆராய ஐந்துபேர் அடங்கிய உயர்நிலை நிபுணர் குழுவை அமைத்து உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டார். இந்த குழு தனது இறுதி அறிக்கையை முதல்வரிடம் கடந்த வெள்ளிக்கிழமை அளித்தது. 800 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில் பலதார மணம் போன்ற நடை முறைகளை தடை செய்வதற்கும், அனைத்து மதத்தினருக்கும் ஒரேமாதிரியான திருமண வயதை நிர்ணயிப்பதற்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் கீழ் திருமணம், விவாகரத்து செய்யும் நடைமுறை தண்டனைக்குரிய குற்றங்களாக அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது. இந்த வரைவு மசோதாவுக்கு உத்தராகண்ட் அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, அந்த மசோதா இன்று (பிப்.6) உத்தராகண்ட் சட்டப்பேரவையில் தாக்கல்செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திங்கள்கிழமை தொடங்கி 4 நாட்கள் நடைபெறவுள்ள உத்தராகண்ட் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இந்த மசோதாசட்டமாக நிறைவேற்றப்படும் பட்சத்தில் நாட்டில் பொது சிவில்சட்டத்தை முதன்முதலில் அமல்படுத்திய மாநிலம் என்ற பெருமையை உத்தராகண்ட் பெறும்.