ப |
பொது சிவில் சட்டத்தை அமலாக்க வேண்டும் என்று அரசியல் சாசனத்தை வடிவமைத்த டாக்டர் அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் சாசன அவையில் இடம் பெற்றிருந்த பல்வேறு தலைவர்களும் இதே கருத்தை வற்புறுத்தி உள்ளனர். அதுமட்டுமல்லாமல் உச்சநீதிமன்றம், பொது சிவில் சட்டத்தை காலந்தாழ்த்தாமல் கொண்டு வாருங்கள் என மத்திய அரசையும் மாநில அரசுகளையும் பலமுறை வற்புறுத்தி உள்ளது. ஆனால் துரதிருஷ்டவசமாக கடந்த காலத்தில் பதவியிலிருந்த காங்கிரஸ் அரசுகள் இதை ஒரு பொருட்டாக கருதவில்லை. வாக்கு வங்கி அரசியலும், முஸ்லிம்களை தாஜா செய்ய வேண்டும் என்ற மனோபாவமும் தான் பொது சிவில் சட்டத்தின்பால் காங்கிரசின் கவனத்தை குவிக்கவிடவில்லை.
அரசமைப்புச் சட்டம் 1950ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி நடைமுறைக்கு வந்தது. பாரதம் அப்போதுதான் குடியரசு ஆனது. குடியரசாகி 75 ஆண்டுகள் கடந்து விட்டன. எனினும் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பதில் ஏராளமானோர் அசிரத்தையாகவே உள்ளனர்.
விதிவிலக்காக உத்தராகண்ட் இதில் முன்னெடுப்பை மேற்கொண்டது. இது வரவேற்கத்தக்க நிகழ்வு. அதுமட்டுமல்லாமல் இது முன்னுதாரணமாக திகழக்கூடியது. முன்னோடியாக விளங்கக்கூடியது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பொது சிவில் சட்டம் திடீரென கொண்டு வரப்படவில்லை. அதற்கு ஒரு வரலாறு உள்ளது. பாரதிய ஜனதா கட்சியும் அதற்கு முன்னோடியாக இயங்கி வந்த பாரதிய ஜனசங்கமும் ஒவ்வொரு தேர்தல் அறிக்கையின் போதும் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவோம் என்று தொடர்ந்து குறிப்பிட்டிருந்தன. உத்தராகண்டில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதற்கு முன் பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம் என்று திட்டவட்டமாக குறிப்பிடப்பட்டிருந்தது.
புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பாஜக அரசு உத்தராகண்டில் பதவியேற்றவுடன் இதில் தனது கவனத்தை செலுத்தியது. மாநில அமைச்சரவையின் முதல் கூட்டத்திலேயே அதாவது 2022ம் ஆண்டு மே மாதம் 27ம் தேதியன்றே பொது சிவில் சட்டத்தை வரையறை செய்ய குழு அமைக்க ஒப்புதல் அமைக்கப்பட்டது. இந்த குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் செயல்பட்டார். இக்குழு 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி அறிக்கையை சமர்ப்பித்தது. இக்குழு பல்வேறு கோணங்களிலும் அலசி ஆராய்ந்து அறிக்கையை மிக நேர்த்தியாக வடிவமைத்துள்ளது.
இதற்கு, 2024ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி மாநில சட்டப்பேரவை ஒப்புதல் அளித்தது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது ஆளுநர் வாயிலாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதற்கு குடியரசு தலைவர் 2024ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி ஒப்புதல் அளித்தார். மார்ச் மாதம் 12ம் தேதி உத்தராகண்ட் பொது சிவில் சட்டம் பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. இதைத்தொடர்ந்து பொது சிவில் சட்டம் சார்ந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டு இந்த விதிமுறை தொகுப்பு அக்டோபர் 18ம் தேதி சமர்ப்பிக்கப்பட்டது. இவ்வருடம் ஜனவரி மாதம் 27ம் தேதி உத்தராகண்டில் பொது சிவில் சட்டம் அமலாக்கப்பட்டது. பாரதம் குடியரசாகி 75 ஆண்டுகள் கடந்த பிறகு தான் முதல் முறையாக ஒரு மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முடிந்துள்ளது. மேலும் பல மாநிலங்கள் இதே தடத்தில் பயணிக்க முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் இன்னும் கடக்க வேண்டிய தொலைவு அதிகமாகவே உள்ளது.
குழந்தைகளுக்கு சட்ட பாதுகாப்பு
“உத்தராகண்ட் அரசு பாரபட்சமற்ற முறையில் இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. சமநோக்கு தான் இதற்கு அடிப்படை. திருமணமாகாமல் சேர்ந்து வாழ்பவர்களும் கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த பந்தத்தின் அடிப்படையில் பிறக்கின்ற குழந்தைகள் உயிரியல் ரீதியாக சம்பந்தப்பட்ட நபர்களின் குழந்தைகளாகவே கருதப்படும். இந்த குழந்தைகளுக்கு எல்லா உரிமைகளும் அளிக்கப்படும்.
2022ல் என்ன நடைபெற்றது என்பதை நினைத்துப் பார்க்கும்போதே நெஞ்சம் பதறுகிறது. அப்தாப் என்பவரும் சாரதா என்பவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். சாரதாவின் உடலை அப்தாப் துண்டு துண்டாக நறுக்கி குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விட்டார். எதிர்காலத்தில் இத்தகைய விரும்பத்தகாத சம்பவம் நிகழ இடம் கொடுக்கக்கூடாது என்ற அடிப்படையில்தான் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளோம். யாருடைய அந்தரங்கத்துக்குள் ஊடுருவ அரசு விரும்பவில்லை. ஆனால் அதே நேரத்தில் பெண்களின் பாதுகாப்புக்கும் பங்கமற்ற வாழ்வுக்கும் உத்தரவாதம் அளிக்க அரசு முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது’’ என்று உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறியுள்ளார்.
பழங்குடியினருக்கு சிறப்பு சலுகை
உத்தராகண்டில் கொண்டு வரப்பட்டுள்ள பொது சிவில் சட்டத்தில் ஒரு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நடைமுறை சார்ந்த விவேகத்தின் அடிப்படையில் இந்த விலக்கு வழங்கப்பட்டுள்ளது என்று அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்த பொது சிவில் சட்ட வரம்புக்குள் பழங்குடியினர் கொண்டு வரப்படமாட்டார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உத்தராகண்டில் கொண்டு வரப்பட்டுள்ள பொது சிவில் சட்டம் மதச்சார்பற்றது என்பதை பிரதமர் நரேந்திர மோடியின் அடியொற்றி முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியும் தெளிவுபடுத்தியுள்ளார். நீங்கள் எப்படி வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் ஆணுக்கு குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். பெண்ணுக்கு குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் என்பதை பொது சிவில் சட்டம் திட்டவட்டமாக வரையறை செய்துள்ளது.
விவாகரத்துக்கும், பொதுவான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. முஸ்லிம் பெண்களுக்கு பாதகமான முத்தலாக் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பலதார மணத்துக்கு இடமில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 2வது திருமணம் என்பதற்கு அனுமதி கிடையாது. சொத்தில் மகனுக்கு, மகளுக்கும் சம உரிமை உண்டு. பொது சிவில் சட்டம் பெற்றோரின் வாழ்வுக்கும் கண்ணியத்துக்கும் உத்தரவாதம் அளிக்கிறது.
பிரத்யேக செயலி
பொது சிவில் சட்டத்தை அமலாக்க பிரத்யேக செயலி உருவாக்கப்பட்டுள்ளது. தலைமை பதிவாளர், பதிவாளர், சார்பதிவாளர் அதிகாரங்கள் வரையறை செய்யப்பட்டுள்ளன. 2010ம் ஆண்டு மார்ச் 26ம் தேதிக்கும், 2025ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதிக்கும் இடையே நடைபெற்ற திருமணங்கள் 6 மாத காலத்துக்குள் பதிவு செய்யப்பட வேண்டும். 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதிக்கு பிறகு நடைபெற்ற திருமணங்கள், 60 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும் என காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. கோவாவிலும், உத்தராகண்டிலும் பொது சிவில் சட்டம் வந்துள்ளதைப் போல பாரதம் முழுவதும் இது விரைவில் அமலாக வேண்டும் என்பதே தேசபக்தர்களின் எதிர்பார்ப்பு.
கட்டுரையாளர்: செய்தியாளர்
ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து
தமிழில் : அடவி வணங்கி