உண்மையான நண்பன் யார்? பரதம் பதில்கள்

ஸ்ரீ ராமபிரான் அணிலின் முதுகில் மூன்று கோடுகளைப் போட்டார் என்பது உண்மையா?

– மு. தயாநிதி, பெரியபாளையம்

ஸ்ரீ ராமபிரான் சேதுபாலம் அமைத்தபோது, அணில் செய்த சிறு உதவியைப் பாராட்டி ராமர் அணிலை முதுகில் தடவிக் கொடுத்தார். அதனால் அணிலின் முதுகில் மூன்று கோடுகள் இருக்கிறது என்ற நம்பிக்கை நாடு முழுவதும் இருக்கிறது.

 

உண்மையான நண்பன் யார்?

– பாரதி மைந்தன், தக்கலை

பொதுவாக மனைவி தான் நல்ல நண்பர் (இறைவன் அருளால் அமைவதைப் பொறுத்தது). இறக்கும் தருணத்தில், நாம் செய்த தர்மம்தான் நமக்கு உண்மையான நண்பனாக அமையும்.

 

இந்த ஆண்டு துக்ளக் ஆண்டுவிழாவில் ‘சோ’ பேசிய பேச்சு பற்றி?

– பெ. விஸ்வநாதன், விருத்தாசலம்

மத்தியில் மோடி அரசைப் பாராட்டினார். மாநிலத்தில் மீண்டும் குடும்ப ஆட்சி (திமுக) வரக்கூடாது என்றார். அதேநேரத்தில் வெற்றிபெற வாய்ப்பு இல்லாத கட்சிக்கு வாக்களிப்பது வீண் என்றார். இது மறைமுகமாக அதிமுகவை ஆதரிப்பது போல் தோன்றியது. ஜெயிக்கிற கட்சிக்கு வாக்களியுங்கள்” என்று சொல்வதைவிட, ஜெயிக்க வேண்டிய கட்சிக்கு வாக்களியுங்கள்” என்று அவர் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

 

* தற்காலச் சூழ்நிலையில் ஹிந்துமதம் காப்பாற்றப்படுவதற்கும் வலிமையோடும் இருப்பதற்கும்   நாம்   என்ன   செய்ய   வேண்டும்?

– சி. பரமசிவன், ஆலங்குடி

முதலில், நமது ஹிந்துக்களுக்கு, நமது மதத்தின் பெருமை தெரிய வேண்டும். அடுத்து நமது மதத்திற்கு இருக்கிற ஆபத்துகள் (மதமாற்றம், பயங்கரவாதம், கலாசார சீரழிவு) புரிய வேண்டும். இதற்கு, பரதனாருக்குத் தெரிந்த ஒரு வழி வீடு தோறும் விஜயபாரதம் செல்ல வேண்டும். சரிதானே! உங்கள் நண்பர்கள், உறவினர்கள் 5 பேர்களை விஜயபாரதம் சந்தாதாரர் ஆகச் சேருங்கள். உங்களுக்கு புண்ணியமும் கிடைக்கும்.

 

பரதனாரே… தாங்கள் சமீபத்தில் ரசித்த திரைப்படம் எது?

– பாரதி தனசேகர், மயிலாப்பூர்

பசங்க 2. பிரபலமான கதாநாயகனோ கதாநாயகியோ இல்லை, காதல் இல்லை, அடிதடி சண்டை இல்லை, டப்பாங்குத்து பாட்டு இல்லை. குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய அம்சங்களைச் சொல்லும் நல்லதொரு படம் – குடும்பத்துடன் பார்க்கலாம்.

 

* ஹிந்து, கிறிஸ்தவர்களில் கடவுள் மறுப்பவர்கள், வெறுப்பவர்கள் உள்ளனர். ஆனால் முஸ்லிம் மதத்தில் அப்படி ஒருவர் கூட இல்லையே ஏன்?

– எஸ்.ட்டி. ஸ்ரீனிவாசன், சிட்லபாக்கம், சென்னை

அல்லா இல்லை… குரான் பொய் என்று யாராவது ஒரு முஸ்லிம் சொன்னால், அவ்வளவுதான். பத்வாதான்… அடுத்த நிமிடம் உயிரோடு இருக்க முடியாது. இந்த பயம்தான் காரணம்.

 

ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் சுப்ரீம் கோர்ட் விதித்த தடை பற்றி?

– கே. பரந்தாமன், வாழப்பாடி

பீப் பிரியாணி, பீப் பக்கோடா, பீப் விருந்து பற்றியெல்லாம் கவலைப்படாத ‘பீட்டா’ அமைப்பு ஜல்லிக்கட்டுக்குத் தடை கேட்டதில் வெளிநாட்டு சதி இருக்குமோ என்று தோன்றுகிறது. ‘பீட்டா’ அமெரிக்காவின் கைக்கூலி என்பதை மறந்துவிடக் கூடாது.

 

* குறியிட்ட கேள்விகளுக்கு புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.