உச்ச நீதிமன்றம் எச்சரித்ததால் பணத்தை செலுத்திய ஸ்பைஸ்ஜெட்

 

பணத்தை செலுத்தாவிட்டால், நிறுவன தலைவரை திகார் ஜெயிலுக்கு அனுப்ப வேண்டியிருக்கும்’ என உச்ச நீதிமன்றம் கண்டிப்பு காட்டியதை அடுத்து, ‘ஸ்பைஸ்ஜெட்’ நிறுவனம், ‘கிரெடிட் ஸ்விஸ்’ நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 12.45 கோடி ரூபாயை, செலுத்தி விட்டதாக தெரிவித்து உள்ளது. உள்நாட்டு விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட கிரெடிட் ஸ்விஸ் முதலீட்டு வங்கிக்கு திருப்பி செலுத்த வேண்டிய 12.45 கோடி ரூபாயை செலுத்திவிட்டதாக தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க, கிரெடிட் ஸ்விஸ் நிறுவனத்துக்கு, கடந்த 14ம்
தேதியன்று, 12.45 கோடி ரூபாயை செலுத்திவிட்டதாக ஸ்பைஸ்ஜெட் அதன் அறிக்கையில் தெரிவித்து உள்ளது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வரும் 22ம் தேதிக்குள் பணத்தை செலுத்த வேண்டும்; இல்லையென்றால் அதன் நிறுவனர் அஜய் சிங் திகார் சிறைக்கு அனுப்பப்படுவார் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், உடனடியாக பணம் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கிரெடிட் ஸ்விஸ் மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்கள் கடந்த 2015ம் ஆண்டிலிருந்து  வழக்காடி வருகின்ற நிலையில், கடந்தாண்டு உச்சநீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில், இரு தரப்பும் பிரச்சனையை தீர்க்க ஒப்புக்கொண்டன. ஆனால், நடப்பாண்டு மார்ச் மாதம், தீர்வு
விதிமுறைகளின்படி நிலுவைத் தொகையை செலுத்தத் தவறிவிட்டதாக, ஸ்பைஸ்ஜெட்
நிர்வாக இயக்குனர் அஜய் சிங் மீது, கிரெடிட் ஸ்விஸ் அவமதிப்பு வழக்கு தொடுத்தது.
இதையடுத்து உடனடியாக பணத்தை செலுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.ஸ்பைஸ்ஜெட் பணத்தை செலுத்திவிட்ட செய்தி வெளியானதைத் தொடர்ந்து, நேற்று பங்குச்சந்தையில் அதன் பங்குகளின் விலை 4 சதவீதம்அளவுக்கு உயர்வைக் கண்டது.