உச்சத்தில் இந்திய பங்குச் சந்தை

பங்கு வர்த்தகம் காலை தொடங்கியபோது சென்செக்ஸ் 2778 புள்ளிகளை எட்டியது. அதனால் 76,738.89 புள்ளிகள் என்ற ஆல்-டைம் உச்சத்தில் வர்த்தகமாகிறது. நிஃப்டி 50-ம் 808 புள்ளிகளாக ஏற்றம் கண்டுள்ளது. இதனால் 23,338.70 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் முதலீட்டாளர்கள் குஷி அடைந்துள்ளனர்.
இதன் எதிரொலியாக பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் மீதான விலை ஏற்றம் கண்டுள்ளது. அதோடு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 43 பைசா ஏற்றம் கண்டுள்ளது. அனைத்து வர்த்தகமும் இன்று ஏற்றத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது செவ்வாய்க்கிழமை தேர்தல் முடிவுகளின்போது பாஜக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் கைப்பற்றினால் பங்கு வர்த்தகம் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொடும் என துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்தனர். குறிப்பாக பொதுத்துறை நிறுவனங்கள், அதானி, முகேஷ் அம்பானி நிறுவனங்களின் பங்குகள் முக்கியத்துவம் பெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெல்லும் என்று பெரும்பாலான ஊடக கணிப்பு தெரிவித்தன. இதனால், இன்றைய பங்கு வர்த்தகம் ஏற்றத்தில் காணப்படும் என்று நிபுணர்கள் கணித்திருந்தனர். அதுவே தற்போது நடந்துள்ளது. இந்தியாவை சர்வதேச அளவிலான உற்பத்தி மையமாக கட்டமைப்பதற்கான முயற்சியை பிரதமர் மோடி தலைமையிலான அரசு தொடரும் என முதலீட்டாளர்கள் எதிரபார்ப்பதாக சொல்லப்படுகிறது