ஜான்சிராணி லக்ஷ்மி பாயின் வாழ்க்கையை சித்தரிக்கும் போது உள்ளத்தில் தேசபக்தி பதியும் விதத்தில் ‘மணிகர்ணிகா’ திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள்.
கற்பனை அல்ல, நமது தேசத்தின் நிஜ சுதந்திர போராட்ட வரலாறு என்பதால் அன்று பாரதத்தில் மன்னர்களும் அரசிகளும் எப்படியெல்லாம் இருந்திருக்கிறார்கள் என்பதையும் காட்டுகிறார்கள்.
ஜான்சி ராணி பெண்களுக்குப் போர்ப் பயிற்சி கொடுத்து ஆங்கிலேயனின் நாடு பிடிக்கும் தந்திரங்களை தவிடுபொடியாக்க திட்டம் தீட்டுகிறார் என்றால் சில குறுநில மன்னர்கள் ஆங்கிலேய அடிவருடிகளாக இருந்து கொண்டு தேசபக்தர்களை காட்டிக் கொடுக்கிறார்கள்!
கோயிலுக்குள் மறைந்திருந்து தாக்கும் ஆங்கிலேயன் தந்திரத்தை தேசத்துரோக குறுநில மன்னர்களின் வஞ்சகமென சித்தரிக் கிறார்கள். அதை எல்லாம் மீறி லட்சுமி பாய் வெற்றிகரமாக ஆங்கிலேயர் சதியை முறியடிக்கிறார்.
பல்வேறு போர்முனைகளில் நாடு நெடுக நடந்த 1857 சுதந்திரப் பேரெழுச்சியின் ஒரு காட்சியான ராணி ஜான்சி லட்சுமிபாயின் போர் சாகஸம், லட்சுமி பாயின் தைரியத்தையும் தேசபக்தியையும் பதிவு செய்கிறது. கங்கனா ரணாவத் லட்சுமி பாயாக நடிக்கும் மணிகர்ணிகா திரைப்படம் தொடங்கும் போது ஒரு கனத்த குரல் ஆங்கிலேயன் பாரதத்தை எப்படி எல்லாம் கொள்ளையடித்தான் என்பதை விவரித்துக் கொண்டே இருக்கும்போது கம்பீரமான ஜான்சி ராணியாக கங்கனா திரையில் தோன்றுகிறார். தேசபக்தி உணர்வை கிளறும் படம் என்பதால் இரண்டே வாரங்களில் ரூ.115 கோடி வசூல் சாதனை படைத்து அசத்துகிறாள் மணிகர்ணிகா.
படம் முடிவடையும் வரை பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் மத்திய பாரதத்தில் நடந்த ஜான்சி ராணியின் வீர வரலாற்றை சுவை குன்றாமல் தருகிறார்கள்.
குடும்பத்துடன், குறிப்பாக இளைய தலைமுறையினருடன், அமர்ந்து பார்க்க வேண்டிய படம்.
– வை. சிவக்குமார்