தமிழக உங்கள் மாத சம்பளம் வங்கிக் கிளை மூலம் பட்டுவாடா செய்யப் படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்; ஒரு வங்கிக் கணக்கைத் துவக்குகிறீர்கள். அதில் பணம் செலுத்தவும் எடுக்கவும் என்று அந்த வங்கிக் கணக்கைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். இரண்டு வருடம் கழிந்த பின் நீங்கள் வேறு ஒரு நிறுவனத்திற்கு மாறி விடுகிறீர்கள், வேறு ஊருக்கும் குடி பெயர்ந்து விடுகிறீர்கள். நீங்கள் இங்கே இன்னொரு புதிய வங்கி வாடிக்கையாளர் ஆகி விடுகிறீர்கள். பழைய வங்கியை, கணக்கை மறந்தே விடுகிறீர்கள். ஆனால் வங்கிகளின் கணினி சிறிதும் கடமையில் தவறாமல், உங்கள் கணக்கில் 6 மாதங்களாக பற்று, வரவு இல்லாமல் இருந்தால், உங்கள் கணக்கை ‘ செயலற்ற கணக்கு ‘ என்று குறித்து வைத்துக் கொண்டு விடும். திடீரென்று சில மாதங்கள் சென்ற பின், உங்களுக்கு அந்த கணக்கில் தொகை இருக்குமே என்று நினைவுக்கு வருகிறது. நீங்கள் அந்த பணத்தை எடுக்க வேண்டும் என்று முயன்றால் அப்பொழுது வரும் சிக்கல். வங்கி மென்பொருள் கட்டை போட்டு விடும். நீங்கள் மறுபடியும் உங்கள் சொந்த விவரங்கள் (அடையாளம், இருப்பிட சான்றுகளை, KYC proof ஐ ) அளித்து ‘ நான் தான் அந்த நபர், அந்த குறிப்பிட்ட இடத்தில் வசிக்கிறேன் ‘ என்று நிரூபித்து கணக்கைப் புதுப்பிக்க வேண்டும் என்பது தான் நடைமுறை. இதுவே பலருக்கு சிரமமாகப் போய் விடுகிறது. அடுத்த நிலை: ஒரு கணக்கு 10 வருடங்கள் செயலற்ற கணக்காக இருந்து விட்டால், அது ‘ கோரப்படாத கணக்கு ‘ என வகைபடுத்தப்படுகிறது. அப்பொழுது உங்கள் கணக்கைப் புதுப்பிக்கவோ முடித்துக் கொள்ளவோ வங்கிக் கிளை அளவில் இயலாது. கிளையின் தலைமை அலுவலகத்திற்கு உங்கள் விண்ணப்பம் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு ஒரு மாத அளவு வரை நீங்கள் காத்திருக்க நேரிடும். உங்கள் விண்ணப்பத்திலோ, சான்றுகளிலோ ஏதேனும் குறை இருந்தால் நிராகரிக்கப்படுதலும் நடக்கலாம். மீண்டும் நீங்கள் குறைகளை நீக்கி விண்ணப்பிக்க வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளாக இத்தகைய ‘செயலற்ற கணக்குகளும் ‘ ‘ கோரபடாத கணக்குகளும்’ வெகு வேகமாக, அபாயகரமாக, அதிகரிப்பதைக் கண்ட பாரத ரிசர்வ் வங்கி, அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை வாயிலாக சில வழிகாட்டி நெறிமுறைகளை எடுத்துரைத்திருக்கிறது. தேவையான நடவடிக்கைகளை எடுக்கச் சொல்லி, காலாண்டுக்கு ஒருமுறை நிலைமையை, ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை தனக்கு அறிவிக்க வேண்டும் என்றது. வங்கிகள் தத்தம் இணைய தளத்தில் இவற்றை விளக்க வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கை அறிவுறுத்தியுள்ளது.
அதன் படி, ஒவ்வொரு வங்கியும் செயலற்ற கணக்கு வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ளவும், அவர்கள் KYC சான்றுகளை சமர்ப்பிக்கவும் கைபேசி / இணைய / மின்னஞ்சல் வழியாக என்று இயன்ற வகையில் எல்லாம் முயற்சிக்க வேண்டும். நடைமுறைகள் எளிமைப் படுத்தப் பட வேண்டும், வாடிக்கையாளர் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த வேண்டும் என சுற்றறிக்கை விரிவாக நிலைமையின் அவசரத்தை விளக்குகிறது.
ஏன் இந்த அவசரம்? பல சிறிய வங்கிகளின் செயலற்ற கணக்குகளில் உள்ள தொகை, செயல்படும் கணக்குகளில் உள்ள தொகையைக் காட்டிலும் அதிகம் என்னும் விந்தையான நிலை உள்ளது. இவற்றில் அரசாங்கம் பல்வேறு நலத்திட்டங்களுக்காக டிஜிட்டல் முறையில் செலுத்தும் உதவித் தொகைகளும் சிக்கியுள்ளன. பயனாளிகளுக்கும் அரசுக்கும் என இருவருக்கும் நட்டம். மேலும் ஒரு அபாயமும் உள்ளது. ஹாக்கர்களுக்கு இத்தகைய கணக்குகள் தான் தங்களுடைய மோசடிகளை நிறைவேற்றிக் கொள்ள ஏற்றதொரு ஏவுதளம்.
வங்கிகள் ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல் படி களத்தில் சுறுசுறுப்பாய் இயங்க வேண்டும் என்று கோரிக்கை விடும் சமயத்தில், ஒரு வாடிக்கையாளராய் நாமும் நம் பொறுப்பைச் சரியாக நிறைவேற்ற வேண்டும். பாலன்ஸ் தொகை சிறிதோ பெரிதோ ஒரு வங்கி கணக்கு நமக்குத் தேவை இல்லை என்றால், உடனடியாக மீதமுள்ள தொகையை முற்றிலுமாக எடுத்துக் கொண்டு கணக்கை முடித்து விட வேண்டும். ஒவ்வொரு ரூபாயும் நம் உழைப்பில் வந்தது என்ற பொறுப்பு வேண்டும். பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்றால் சிக்கல், அலைச்சல், எரிச்சல்; கூடவே நேரம், பொருள் தண்டம். தேவையா இது?.