ஈரோடு மக்கள் ஒற்றுமை தந்த வெற்றிப் ‘பாதை’!

டிசம்பர் 7 ஞாயிறன்று ஈரோடு நகரமே ஒரு வெற்றிவிழா கொண்டாடியது. சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் எஸ்.எம். சுப்பிரமணியம், பி. தனபால் கொண்ட பெஞ்ச் நவம்பர் 20 அன்று அளித்த தீர்ப்பு, ஈரோடு மக்களின் ஒன்றுபட்ட சக்திக்கு கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திற்கு எதிராக அமைந்துள்ள அருள்மிகு பெரிய மாரியம்மன் கோயிலுக்கு பாத்தியப்பட்ட அரசு புறம்போக்கு நிலத்தை சட்டவிரோதமாக கைப்பற்றி, அனுபவித்து வரும் சி.எஸ்.ஐ சர்ச் செய்த மோசடிக்கு மரண அடியாக வந்த தீர்ப்பு இது. இதோ விவரம்:

சில ஆவணங்கள் சுட்டிக்காட்டியுள்ளபடி, மாரியம்மன் கோயிலின் 12.66 ஏக்கர் நிலத்தை கிறிஸ்துவர்கள் ஆக்கிரமித்தார்கள்; அது இன்று சி.எஸ்.ஐ சர்ச்சின் கட்டுப்பாட்டில் உள்ளது. மன்னர்களால் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட சுமார் 49 ஏக்கர் நிலம் முழுவதும் சர்ச்சால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. 1921-ல் தேசிய கவி சுப்பிரமணிய பாரதி இக்கோயில் கிணற்றில் குளித்து விட்டு, அருகில் உள்ள மந்தைவெளி மாரியம்மன் கோவிலில் தரிசனம் செய்துள்ளதாக வரலாற்று ஆவணங்கள் உள்ளன.

ஈரோடு ரயில் நிலையத்தையும் பிரப் சாலையையும் இணைக்கும் சாலையை உருவாக்க அரசு 1920 ல் திட்டமிட்டது. அது அரசிதழில் 1935ல் பதிவானது. சி.எஸ்.ஐ சர்ச் நிர்வாக முட்டுக்கட்டை காரணமாக, இணைப்புச் சாலையை முடிக்க முடியவில்லை. இது 2023 ஆம் ஆண்டின் ஒரு வழக்கிலிருந்து தெரிய வருகிறது.
அந்த 80 அடி சாலை ஈரோடு நகர மக்களின் பொது நலனுக்காகவும் நகரத்தில் போக்குவரத்தை எளிதாக்குவதற்காகவும் உள்ளது என்றும் தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.

80 அடி சாலை அமைக்க காலதாமதம் செய்யக் கூடாது; 1968 முதல் 2020 வரையிலான நிலத்தின் வருவாய் பதிவுகள், அந்த நிலம் அரசு புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கும்; அந்த வகைப்பாடு இன்று வரை தொடர்கிறது. இவையும் தீர்ப்பு தரும் தகவல்கள்.

இந்த தீர்ப்பு என்பது ஒரு நாள் அல்லது சில நாட்கள் போராட்டத்தால் ஏற்பட்ட வெற்றியல்ல. 1991 தொடங்கி நடக்கும் போராட்டம் அது. போக்குவரத்து பிரச்சனையை காரணம் காட்டி, கோயில் முன்பு மேம்பாலம் அமைக்கும் முயற்சியில், ஹிந்து விரோத திமுக அரசு முயன்ற போது, ஈரோடு மக்களின் ஒன்றுபட்ட சக்தி காட்டிய எதிர்ப்பால் மேம்பாலம் அமைக்கும் அரசின் முடிவு கைவிடப்பட்டது.


வழக்கில் சி.எஸ்.ஐ சர்ச் தெரிவித்த ஆவணங்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்தன; ஏலத்தில் எடுத்ததாக கூறியது மோசடி; மோசடியாக கிரையப் பத்திரம் கட்டி அரசை ஏமாற்றி தனக்கில்லாத உரிமையை, இருப்பதாக சர்ச் கூறியது மோசடித்தனம். நீதிமன்ற உத்தரவின் படி, தனி தாசில்தார் 2012ல் அளித்த அறிக்கை, அந்த 12.66 ஏக்கர் நிலம் அரசுக்கு சொந்தமானது என குறிப்பிட்டது மிகவும் முக்கியமானது.

கோயிலை அப்புறப்படுத்தாமல் போக்குவரத்தை சரிசெய்ய, 80 அடி சாலைத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என 2011-ல் ஈரோடு மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2017-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவின் பேரில், 80 அடி சாலைக்கு பதிலாக 25 அடி சாலை அமைக்க நிலம் தருவதாக சி.எஸ்.ஐ நிர்வாகம் 2017ல் தெரிவித்த கருத்தை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.

அடுத்து ஈரோடு மக்களின் ஒன்றுபட்ட சக்தியின் காரணமாக, சென்னை உயர்நீதிமன்றம், 80 அடி சாலையை அமைத்துக் கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி 2022ல் உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவை திராவிட மாடல் அரசு அலட்சியப்படுத்திவிட்டது.

ஈரோடு மாரியம்மன் கோயில் நில மீட்பு அமைப்பை ஏற்படுத்தி சுமார் 20 ஆண்டுகால போராட்டத்தில், ஈரோடு மக்கள் நலம் நாடுவோர் சங்கம், ஈரோடு மாநகர் மக்கள் மேம்பாடு சங்கம், ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் கூட்டமைப்பு உள்ளிட்ட 119 அமைப்புகள் இணைந்து, எவ்வித பாகுபாடின்றி போராட்டக் களத்தில் ஒன்றுப்பட்டு நின்றதால் இந்த தீர்ப்பு கிடைத்தது. சுமை தூக்குவோர், கைவண்டி தொழிலாளர்கள் சங்கமும் இந்த போராட்டக் களத்தில் முழு மூச்சுடன் இணைந்து செயல்பட்டன.


ஈரோடு மக்களை ஒன்றிணைக்கும் பணியை முன்னின்று நடத்தியவர்கள் ஆர்.எஸ்எஸ். அமைப்பின் நகர சங்கசாலக் இ.ஆர்.எம். சந்திரசேகர், ஹிந்து முன்னணியின் சண்முகசுந்தரம், சேவாபாரதி மூத்த காரியகர்த்தா ஆடிட்டர் தேவி பிரசாத், வைரவேல் போன்றவர்கள். வழக்கு விஷயங்களை கவனித்தவர்கள் என்.பி. பழனிச்சாமி, சாமிநாதன், காலஞ் சென்ற பூசப்பன், மருத்துவர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டவர்கள்; ஈரோடு நகர பிரமுகர்களை இணைக்கும் முயற்சியில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்க்ள் தொழிலதிபர் கைலாசபதி போன்றோர். கோயிலை காக்க தாய்மார்கள் உள்பட அனைத்து தரப்பு ஹிந்துக்களும் வீதிக்கு வந்தது தமிழகத்தை திரும்பிப் பார்க்கச் செய்தது.

சற்றே வரலாறு

ஈரோடு பெரிய மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்கவும், ஈரோடு பொதுமக்களின் நலனுக்காக ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து மீனாட்சிசுந்தரனார் சாலை வரை 80 அடி சாலை அமைக்கவும் நடந்த போராட்ட வரலாறு:

* பொங்கல் வைப்போம்’ என 1991-ல் தொடங்கியது போராட்டம்.
1999 முதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். குறிப்பாக அதிக அளவில் பெண்கள் கலந்து கொண்டு கைதானார்கள்.
* 2010 ல் 30 பேர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார்கள். கைது செய்து சிறையில் அடைத்த பின்னரும், சிறையில் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தார்கள்.
*அடுத்து ஒரு நாள் உண்ணாவிரதம். அந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டார்கள்.
*முன்னதாக 2010ல், அரசியல் கட்சிகளே வியக்கும் வண்ணம் ‘ஒரு நாள் அடையாள கடை அடைப்பு’ போராட்டம் நடைபெற்றது. இதில் தாமாக கலந்து கொண்ட சின்னஞ்சிறு டீக்கடை தொடங்கி எந்தக் கடையும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்கவில்லை. இதன் காரணமாக 50 கோடி ரூபாய் மதிப்புள்ள வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
*நீதிமன்றங்கள் மூலமும் போராட்டங்கள் தொடர்ந்தன. இந்த அனைத்து போராட்டங்களிலும் பரிவார் அமைப்புகள் கலந்து கொண்டு வெற்றியை உறுதி செய்தன.

 

மக்கள் பிரதிநிதிகளும் பக்தர்கள் பக்கம்

பெரிய மாரியம்மன் கோயில் நில மீட்புக் குழுவினர், ஈரோடு மாநகர் மன்ற உறுப்பினர்கள் அனைவரையும் தனித்தனியே சந்தித்து, தங்கள் கோரிக்கைகளை விளக்கினர். இதன் விளைவாக, 29.6.2010ல் நடத்தப்பட்ட மாநகர் மன்ற கூட்டத்தில் பங்கேற்ற 45 உறுப்பினர்களில் 32 பேர் மேம்பாலத்திற்கு எதிராகவும், 80 அடி திட்டச் சாலைக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தனர். குறிப்பாக, மாநகர மேயர் குமார் முருகேசன் (தி.மு.க), துணை மேயர் பாபு வெங்கடாசலம் (காங்கிரஸ்) இருவரும், பக்தர்கள் கோரிக்கைக்கு ஆதரவாகப் பேசினர். இதுகுறித்து துணை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக மேயர் உறுதியளித்தார்.