‘தமிழகத்தின் அனைத்து மூத்த அமைச்சர்களும் ‘இ.டி., ஸ்கேனில்’ உள்ளனர் என பா.ஜ., கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்தார். திருச்சியில், நேற்று நடந்த பா.ஜ., கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில், மூத்த தலைவர் எச்.ராஜா பங்கேற்றார். பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பிரதமர் மோடி, தமிழகம், லட்சத் தீவு, கேரளா மாநிலங்களுக்கு, 2 நாள் சுற்றுப் பயணம் வந்துள்ளார். அவர் வரும் போதெல்லாம், தமிழகத்தின் மேம்பாட்டுக்கான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை துவங்கி வைக்கிறார். கடந்த ஒன்பது ஆண்டுகளில், 11 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் தமிழகத்துக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டு உள்ளன. மத்திய அரசு திட்டங்களின் பயனாளிகள் பட்டியல் தயாரித்து, அவர்களை நேரடியாக சந்தித்து, லோக்சபா தேர்தலுக்கு ஓட்டு சேகரிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் வருகையின் போது, மக்களின் உற்சாகமான வரவேற்பு, தமிழகத்தின் அரசியல் களம் வேமாக மாறி வருவதை தெரியப்படுத்துகிறது. மழை வெள்ள பாதிப்பு போன்ற சம்பவங்கள், மாநில அரசின் மீது மக்களுக்கு பெரிய அளவில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் பாதுகாப்புக்கென வாகனங்கள் வாங்குவதை ஒரு குறையாக சுட்டிக்காட்ட முடியாது. சென்னையில் வெள்ள நீர் வெளியேறும் வகையில், 4,000 கோடி ஒதுக்கி, 92 சதவீதம் பணிகள் செய்யப்பட்டதாக அமைச்சர் கூறிய நிலையில், 42 சதவீதம் மட்டுமே செலவு செய்திருப்பது போன்றவற்றை தான் குறைகளாக, மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
மாநில அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் பெருகி விட்டது. மழை வெள்ளத்தில் மக்கள் மூழ்கியதை விட, ஊழலில் தமிழகம் மூழ்கியது தான் அதிகம். மத்திய அரசு சொல்லித் தான் அமலாக்கத் துறை ரெய்டு செல்ல வேண்டிய அவசியம் ஒருபோதும் இல்லை. செந்தில் பாலாஜி, வேலு, துரைமுருகன் என, தமிழகத்தின் அனைத்து மூத்த அமைச்சர்களும் ‘இ.டி., ஸ்கேனில்’ உள்ளனர். ஒவ்வொருவராக நடவடிக்கைக்கு உள்ளாவர். முதல்கட்டமாக பொன்முடி சுப முகூர்த்தம் செய்து வைத்துள்ளார். அடுத்து, திருச்சியா… திருச்சி இல்லையா என்று இப்போதைக்கு என்னால் சொல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.