இஸ்ரோ விண்வெளி முன்னேற்றம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மனை ‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் சிவன், ஓய்வு பெற்ற விஞ்ஞானி சிவசுப்ரமணியன் தரிசனம் செய்தனர். அப்போது பேசிய சிவன், ‘பாரதம் விண்வெளி பொருளாதாரத்தில் முதன்மை பெற்றிட தனியார் பங்களிப்பு அவசியம். இதற்காக பிரதமர் மோடி புதிய வழிமுறைகளை உருவாக்கியுள்ளார். அதனை விரைவில் செயல்படுத்த வேண்டும். துாத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க மண் ஆய்வு நடந்து வருகிறது. விரைவில் ஆய்வு முடிந்து பணிகள் துவங்கும்.உலகளவில் ஒப்பிடும்போது நமது நாடு விண்வெளி ஆராய்ச்சியில் முன்னேற்றம் கண்டுள்ளது. இன்னும் ஒரு சிலவற்றில் நாம் இன்னும் முயற்சிக்க வேண்டியுள்ளது. விண்வெளிக்கு மனிதனை அனுப்புவதில் நாம் இன்னும் இலக்கை அடையவில்லை. படிப்படியாக நாம் முன்னேறி வருகிறோம். அகண்ட பாரத நாடு மீண்டும் மகிமை பெற்றிட வேண்டி வந்துள்ளேன்’ என தெரிவித்தார். மேலும், ‘மாணவர்களில் அறிவியல் முன்னேற்றத்திற்காக இஸ்ரோ பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இதற்காக, ஒவ்வொரு ஆண்டும் ரூ. 4 கோடி ஒதுக்கப்படுகிறது. மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. எனினும், மாணவர்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததால் பயிற்சியில் குறைந்த அளவிலேயே சேர்ந்து பயனடைகின்றனர். வரும்காலங்களில் அதிக மாணவர்கள் இதில் சேர விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்’ என தெரிவித்தார்.