தரையிலிருந்து வான் இலக்குகளை தாக்கி அழிக்கும் ஆகாஷ் ஏவுகணையை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் (டிஆர்டிஓ) உருவாக்கியது. அதை தற்போது பாரத் டைனமிக்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த ஏவுகணை, ஒரே நேரத்தில் 4.5 கி.மீ முதல் 25 கி.மீ தொலைவு வரையுள்ள 4 வான் இலக்குகளை, 100 மீட்டர் முதல் 20 கி.மீ உயரம் வரை தாக்கி அழிக்கும் திறன் வாய்ந்தது. ஆகாஷ் ஏவுகணையின் நீளம் 5,870 மி.மீ, அகலம் 350 மி.மீ, எடை 710 கிலோ. முழுவதும் தானியங்கி முறையில் இயங்கும் ஆகாஷ் ஏவுகணை, வாகன ஏவுதளத்தில் இருந்து ஏவப்படுகிறது. இதனால் இவற்றை ஒரு இடத்தில் இருந்துமற்றொரு இடத்துக்கும் விரைவாக மாற்ற முடியும்.
ஏவுகணை தாக்குதல்கள் ரேடார் மூலம் கண்காணிக்கப்படுவதால், பதில் தாக்குதல் ஏவுகணை வந்த திசையை நோக்கி நடத்தப்படும். ஆகாஷ் ஏவுகணைகள் வாகனங்களில் உள்ள ஏவுதளத்தில் ஏவப்படுவதால், அவற்றை ஏவியபின், பதில் தாக்குதலில் இருந்து தப்பிக்க வேறு இடத்துக்கு விரைவாக கொண்டு செல்ல முடியும்.
எதிரிகளின் ராக்கெட் குண்டுகளை வானிலேயே தடுத்து நிறுத்தி அழிக்க ‘அயர்ன் டோம்’ ஏவுகணைகளை இஸ்ரேல் பயன்படுத்தி வருகிறது. இஸ்ரேல் -ஹமாஸ் தீவிரவாதிகள் இடையேயான போரில் ‘அயர்ன் டோம்’ ஏவகணைகள்தான் இஸ்ரேலை பாதுகாத்தது. ஆகாஷ் ஏவுகணை ஒரே நேரத்தில் 4 வான் இலக்குகளை தகர்ப்பதால் அது இந்தியாவின் ‘அயர்ன் டோம்’ என அழைக்கப்படுகிறது. ஆகாஷ் ஏவுகணைகளை வாங்குவதற்கு அர்மேனியா, பிரேசில் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.