இளம் ஹிந்துவின் எண்ணம், பகாசுரனா, வரட்டும்; பீமன் ஆகிறேன்”

தமிழன் ஹிந்து அல்ல என்று ஒரு பக்கம் கூரையேறி கொக்கரிக்கிறார்கள். இன்னொரு புறம் பிரித்தாளும் வெள்ளையனை வெட்கப்பட வைக்கும் அளவுக்கு ‘லிங்காயத்துகள் என்ற சிவ பக்த சமூகம் ஹிந்து அல்ல’ என்று ஆக்கிவிட கர்நாடகத்தில் நாலாந்தர அரசியல் கூத்து ஒன்றை ஆரம்பிக்கிறது அன்னியன் ஆரம்பித்த காங்கிரஸ் கட்சி / ஆட்சி. தலித்துகளையும் பழங்குடியினரையும் ஹிந்துக்கள் அல்ல என்று ‘நிரூபிக்க’ அன்னிய சக்திகளின் எடுபிடிகளான அறிவுசீவிகள் தலைகீழாக நின்று தண்ணி குடிக்கிறார்கள்.  இந்த சூழலில் குழப்பப் புழுதியைத் துடைத்து சத்தியத்தை அடையாளம் காட்டுகிறார் தேசம், தெய்வம், தர்மம் காக்க ஊடக கேடயங்கள் உருவாக்கி வரும் அணியை சேர்ந்த அறிஞர் ஒருவர்.   

ஹிந்து அடையாளமின்மை வாதம் ­(Negation of Hindu identity), ஹிந்துத் தாக்க நீக்கம் (De-hinduization) என்று  ஹிந்து அடையாளத்தை மறுதலிக்கும் இரண்டு வாதங்களை பொதுவாகக் காணமுடிகிறது. ஒன்று இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவை.

ஹிந்து என்ற பொது அடையாளம் ஒன்று வரலாற்று ரீதியாக இல்லவே இல்லை. ஹிந்து மதத்தின், சமுதாயத்தின் உறுப்புகளாக உள்ள ஒவ்வொன்றும் தனிப்பட்டவை. இவற்றை ‘ஒற்றை பொது அடையாளத்துக்குள்’ கொண்டு வருவது கருத்தியல் வன்முறை என்பது முதலாவது வாதம்.

ஹிந்துப் பண்பாட்டின் சில அம்சங்களை மட்டும் பிய்த்தெடுத்து (உதாரணம்: யோகம், நுண்கலைகள், லிங்க வழிபாடு…), அவற்றின் ஹிந்து இயல்பை மறுதலித்து, அவற்றை தனித்தனியாக முன்னிறுத்துவது இரண்டாவது வாதம்.

மேற்சொன்ன வாதங்களை வைப்பவர்கள் உலகின் மற்ற பூதாகாரமான ஒற்றை பொது அடையாளங்கள்” எவற்றையும் (உதா: கிறிஸ்தவம், இஸ்லாம், சீன ஏகாதிபத்தியம்) இது போன்று கேள்விக்கு உட்படுத்துவதில்லை என்பது மட்டுமல்ல, அவற்றின் ஆக்கிரமிப்புகளையும், நேரடி வன்முறையையும் நியாயப்படுத்துபவர்களாகவுமே இருக்கிறார்கள் என்பது ஒரு சுவாரஸ்யமான முரண் நகை.

சைவம், வைணவம், சாக்தம் ஆகியவை சமயப் பிரிவுகளுக்கான அடையாளங்கள். சாதிகள், குலங்கள் ஆகியவை சமூகப் பிரிவுகளுக்கான அடையாளங்கள். தமிழர், தெலுங்கர், வங்காளி, மலையாளி போன்றவை மொழி/பிரதேசம் சார்ந்த அடையாளங்கள். இவை அனைத்தும் ஹிந்து என்ற பொது அடையாளத்திற்கு எந்த வகையிலும் விரோதமானவை அல்ல, மாறாக அதன் உள் அடங்கியவை. ஹிந்து அடையாளம் என்பது இவற்றை அழித்து உருவானதல்ல, தொகுத்து உருவானது. உலகெங்கும் சமய, சமூக, கலாச்சாரப் பொது அடையாளங்கள் இவ்வாறு தான் அடுக்கு முறையில் உருவாகித் திரள்கின்றன.

இந்த சமுதாய உயிர்த் துடிப்பை புரிந்து கொள்ளாமல், ஹிந்து என்ற வலிமையான பொது அடையாளத்தைத் துறந்து உட்பிரிவு அடையாளங்களை மட்டுமே வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று சொல்வது தற்கொலைக்கு ஒப்பான செயல். ஹிந்து சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு உட்பிரிவையும் அன்னியப்படுத்தி, அவற்றை வலிமையிழக்கச் செய்து, இறுதியில் அவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக அழிவை நோக்கி இட்டுச் செல்ல வழிவகுக்கும் செயல் அது. இதைத் தான் இந்திய தேசிய விரோதிகளும், மார்க்சிஸ்டுகளும் இந்தியாவை ‘கட்டுடைக்கும்’ மேற்கத்திய அறிவுஜீவிகளும் காலம் காலமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த பிரசாரத்தில் மதிமயங்கும் ஹிந்துக்கள் தங்களுக்கும் தங்கள் சந்ததியினருக்கும் பெரும் தீமையையே கொண்டு வருகிறார்கள் என்பதை உணரவேண்டும்.

உலகளாவிய சூழலில் நம்மை பகாசுர சக்திகள் விழுங்கக் காத்துக் கொண்டிருக்கையில் அவற்றுக்கு ஈடாக அவற்றை விழுங்காவிட்டாலும், சமமாக நின்று போரிடும் அளவுக்கு வலிமையுள்ள பீமசேனனாக ஆவது தான் நாம் வாழும் வழியே தவிர, ஒவ்வொரு நாளும் தனித்தனியாக அவற்றிற்குத் தீனியாக ஆகிக் கொண்டிருப்பதல்ல.

ஹவாய் தீவுகள் முதல் நியூசிலாந்து தீவுகள் வரை உலகின் 92 நாடுகளில் ஹிந்துக்கள் வசிக்கிறார்கள். உலக அளவில் ஹிந்துக்களின் மக்கள் தொகை சுமார் 100 கோடி . எண்ணிக்கை அளவில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய மதமாக இந்து மதம் விளங்குகிறது. ஹிந்த மாபெரும் உலகளாவிய அடையாளம் அளிக்கும் வலிமையும் பெருமிதமும் சாமானியமானதா என்ன?

தமிழகத்தின் ஒரு கிராமத்தில் வாழும் ஒரு ஹிந்து, ஏதோ கிறுக்கர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக தனது ஹிந்து அடையாளத்தை மறுதலிப்பது என்பது உலகளவில் தனக்கான இடத்தை ஒரு மாபெரும் வட்டத்திலிருந்து ஒரு சிறு புள்ளிக்கு நகர்த்திக் கொள்வதற்கு ஒப்பாகும். அத்தகைய புள்ளிகள் வெறும் புள்ளிகளாகவே நெடுங்காலம் நீடிப்பதில்லை. அவை ஒரு வட்டத்தில் அடங்கியே ஆக வேண்டும் என்பது உலக இயற்கை விதி.

முத்தாப்பு:

பாண்டிச்சேரியில் கனகலிங்கம் வசித்த தாழ்த்தப்பட்டவர் குடியிருப்புக்குச் சென்ற மகாகவி பாரதி, அங்குள்ள முத்துமாரி அம்மனைக் கண்டு மெய்மறந்து உலகத்து நாயகியே எங்கள் முத்துமாரியம்மா” என்று பாடினார்; உள்ளூர் தெய்வமே” என்று பாடவில்லை!

(‘ஹிந்து: பன்மையின் பாதுகாப்பு அடையாளம்’ என்ற கட்டுரையிலிருந்து. கட்டுரையாசிரியர் ஜடாயு. நன்றி: தமிழ்ஹிந்து டாட் காம்).

 

தோலில் வேற்றுமை, சுளையில் ஒற்றுமை!

நேபாள எல்லையில் உத்தராகண்ட் மாகாணம் (அப்போது உ.பி) சென்றேன். முதலில் எதுவும் பிடித்ததில்லை. கடுகெண்ணையில் அவர்கள் ஆசையாக ஏதும் தின்பண்டம் சமைக்கும் போது குமட்டிக்கொண்டு வரும். அதுவரை சாப்பிட்டு பழக்கமாகாத காலிஃபிளவர் அதிகம் சாப்பிட வேண்டிய நிர்பந்தம். இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இதற்கு மேலாக முதன் முறையாக வாயைத் திறந்து தமிழில் பேச ஆளே கிடையாது. ஆக, பார்ப்பது, பேசுவது, உண்பது என ஒட்டு மொத்தமாக அன்னியமாகி விட்டோமா என ஒரு சமயம் ஆயாசமாய் இருந்தது.

ஆனால் மனிதர்களுடன் பழகப்பழக அட, மொழி தானே வேறு. அதே ராமாயணம், அதே மஹாபாரதம், அதே பாகவதம், அதே சிவபுராணம், அதே நம்பிக்கைகள். அப்போது (1990 களில்) நேபாளத்தில் மன்னராட்சி. எல்லை தாண்டி அங்கும் இப்படியே தான். எப்படி தமிழும் மலையாள பாஷையுமோ அதே போல் குமாவுனியும் நேபாள பாஷையும். வித்யாசங்கள் ஊடே பெருமளவில் ஒற்றை சாயலையும் கண்டு பெரிதும் மகிழ்ந்துள்ளேன். துளசி ராமாயணம் பற்றி அளவளாவுகையில் கம்ப ராமாயணம் பற்றி கேட்டறிந்ததைப் பகிர்ந்தாலோ வால்மீகி ராமாயணம் பற்றி பேசினாலோ மிகவும் ரசித்து ருசித்து கேட்பார்கள். அதன் பின் பஞ்சாப், ஹிமாசலம், காஷ்மீரம் என்று எங்கும் வித்யாசங்களை விட ஒற்றுமையை பின்னர் ரசித்து மகிழ்ந்து வருகிறேன்.