பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடித்த ‘புஜ்: தி ப்ரைட் ஆஃப் இந்தியா’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளிவந்தது. அதில் அவர் இந்திய விமானப்படை ஸ்க்வாட்ரான் லீடர் விஜய் கார்னிக் கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடித்திருந்தார். 1971 பாரத பாகிஸ்தான் போரின் போது விஜய் கர்னிக், புஜ் விமான நிலையத்தின் பொறுப்பாளராக இருந்தார். பாகிஸ்தான் புஜ்ஜில் நடத்திய குண்டு வீச்சு தாக்குதல்களால் புஜ் விமானப்படை விமான நிலையம் கடும் சேதமடைந்தது. அதன் பிறகு உள்ளூர் பெண்களின் உதவியுடன் அது எவ்வாறு மீண்டும் கட்டமைக்கப்பட்டது என்பதை இந்த படம் விவரிக்கிறது.
இதைப் பற்றி சமீபத்தில் ஊடகத்தினரிடம் பேசிய அஜய் தேவ்கன், “சரியான வரலாற்றை முன்னுக்கு கொண்டு வருவது அவசியம். யாருடைய தியாகங்களின் மீது நமது நாடு எழுந்து நிற்கிறது என்பதை இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்வது அவசியம்.
ஆங்கிலேயர்கள் பல ஆண்டுகள் பாரதத்தை ஆட்சி செய்தனர். அப்போது அவர்கள் வரலாற்றை மாற்றி எழுதினர். நமது முன்னோர்கள், அரசர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள் செய்த தியாகங்கள் குறித்துத் தெரிந்திருந்தால் மக்கள் என்றைக்கோ கிளர்ச்சியில் ஈடுபட்டிருப்பார்கள். நமது நாட்டை ஆண்ட முகலாயர்களாலும் பாரத வரலாறு மாற்றி எழுதப்பட்டது. அவர்களுக்கு முன் ஆண்ட நமது அரசர்கள் செய்த வேலைகள் எல்லாம் மறைக்கப்பட்டு விட்டன. நமது புத்தகங்கள் நமது நாட்டின் ஆட்சியாளர்களை விட வெளிநாட்டு ஆட்சியாளர்களைப் பற்றியே அதிகம் பேசுகின்றன.
ஆனால், ஆட்சி செய்பவர்களுக்கேற்ப வரலாறு மாற்றி எழுதப்படுவது இயல்புதான். உதாரணமாக, பள்ளி கல்வி பாடங்களில் மாவீரர் தானாஜியைப் பற்றி வெறும் அரை பக்கம் மட்டுமே கற்பிக்கப்படுகிறது. இதனால், இன்றைய தலைமுறையினருக்கு அவரைப் பற்றி அதிகம் தெரியாது. அவர்களை போன்ற எத்தனையோ பேரின் தியாகத்தாலும், தன்னலமற்ற உழைப்பாலும் இந்த நாடு நிலைத்து நிற்கிறது, அதனால்தான் சுதந்திரம் பெற்றுள்ளது. இதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்கள் சுதந்திரத்தை மதிப்பார்கள்.
அமெரிக்காவில் என்ன நடந்தது என்பது நமது மக்களுக்கு தெரியும். ஆனால் அவர்களின் சொந்த வரலாறு பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. எனவே, அப்படிப்பட்ட படங்களை எடுப்பது வெறும் 2 சதவீத மாற்றத்தையாவது கொண்டுவரும் என்றால் கண்டிப்பாக அதை நாம் செய்தாக வேண்டும். இப்படிப்பட்ட படங்கள் ‘அதி தீவிர தேசியவாதத் தன்மை’ என்று சிலரால் குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் நாட்டுக்காகப் போராடியவர்கள் தியாகம் செய்திருக்கிறார்கள். அது உண்மையான வடிவத்தில் காட்டப்பட வேண்டும்” என கூறினார்.