இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி, அகமதாபாத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்டில் (ஐ.ஐ.எம்) நடந்த ‘ஸ்டார்ட்அப் கேம்பஸ்’ என்ற மாணவர்களுடனான ஒரு கலந்துரையாடலின் போது “நான் 2008 மற்றும் 2012க்கு இடைப்பட்ட காலத்தில் லண்டனில் ஹெச்.எஸ்.பி.சி குழுவில் இருந்தேன். அப்போது முதல் சில ஆண்டுகளில், போர்டுரூமில் நடக்கும் முக்கிய கூட்டங்களின் போது சீனாவின் பெயர் பல முறை குறிப்பிடப்பட்டது, ஆனால் நமது நாட்டின் பெயர் ஒரே ஒரு முறை மட்டுமே குறிப்பிடப்பட்டது. தற்போதைய பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசுடன் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசை ஒப்பிடுகையில், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் முடிவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டதன் விளைவாக பாரதப் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
மன்மோகன் சிங், நான் மிகவும் மதிக்கும் ஒரு அசாதாரண மனிதர். ஆனால் அவரது ஆட்சிக் காலத்தில், பாரதம் தேக்கமடைந்தது. முடிவுகள் உடனடியாக எடுக்கப்படவில்லை, அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது. நான் எச்.எஸ்.பி.சியில் இருந்து வெளியேறும் நேரத்தில் சீனாவின் பெயர் 30 முறை குறிப்பிடப்பட்டிருந்தால், பாரதத்தின் பெயர் ஒரு முறை மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும். துரதிர்ஷ்டவசமாக, பின்னர் அங்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை” என தெரிவித்தார்.
எதிர்காலத்தில் பாரதம் எங்கிருக்கும் என அவர் எதிர்பார்ப்பதாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த நாராயண மூர்த்தி, “வர்த்தக சமூகம், எந்த நாட்டின் பெயரையும், குறிப்பாக சீனாவின் பெயரைக் குறிப்பிடும் எந்த நேரத்திலும் பாரதத்தின் பெயரைக் குறிப்பிடவைப்பது நமது இளம் தலைமுறையினரின் கைகளில்தான் உள்ளது. இளம் தலைமுறையினரால் அது முடியும்” என்று மாணவர்களுக்கு ஊக்கமூட்டினார்.
‘மேக் இன் இந்தியா’ மற்றும் ‘ஸ்டார்ட்அப் இந்தியா’ ஆகியவற்றைக் கொண்டு வந்ததற்காக நரேந்திர மோடி தலைமையிலான அரசை பாராட்டி பேசிய நாராயண மூர்த்தி, “ஒரு காலத்தில் மற்ற நாடுகளைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் பாரதத்தை இழிவாகப் பார்த்தனர். ஆனால் இன்று நமது நாட்டின் மீது குறிப்பிடத்தக்க அளவிலான மரியாதை ஏற்பட்டுள்ளது. பாரதம் இப்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. 1978 முதல் 2022 வரையிலான 44 ஆண்டுகளில் பாரதத்தை சீனா 6 மடங்கு விஞ்சியுள்ளது. ஆனால், இந்தப் பக்கத்தில் அமர்ந்திருக்கும் அற்புதமான நபர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து காரியங்களைச் சாதித்தால், இன்று சீனாவுக்குக் கிடைக்கும் அதே மரியாதை பாரதத்துக்கும் கிடைக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.