அரசியல் கட்சிகள் தேர்தலின் போது இலவச வாக்குறுதிகளை வழங்கி வாக்கு சேகரிப்பதைத் தடுக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள், “வாக்காளர்களுக்கு வாய்ப்பு வழங்கினால் இலவசங்களை விட கண்ணியமான வருவாய் ஈட்டக்கூடிய நலத்திட்டங்களைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். உதாரணமாக, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் ஏழைகளுக்கு கண்ணியமான வருமானத்தை வழங்குகிறது. எனவே, வாக்குறுதிகள் மட்டுமே தேர்தல் முடிவுகளை தீர்மானிக்காது. இலவச வாக்குறுதிகள் வழங்கிய கட்சிகள் தேர்தலில் தோற்றதை பார்த்திருக்கிறோம். அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதி வழங்குவதைத் தடுக்க முடியாது. ஆனால், எவையெல்லாம் அர்த்தமுள்ள வாக்குறுதிகள்? என்பதுதான் இங்கு கேள்வி. தண்ணீர், சில யூனிட் மின்சாரம் ஆகியவற்றை இலவசம் என கருத முடியுமா? மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட நுகர் பொருட்களை நலத்திட்டம் என்ற பெயரில் இலவசமாக வழங்கலாமா? இதுபோன்ற கேள்விகளுக்கு விடை காண வேண்டும்” என்று தெரிவித்தனர்.