இலங்கை மலையகத்தில் உள்ள சீதை அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

இலங்கையின் மலையகத்தில் உள்ள நுவரெலியா நகரில் இருந்து5 கி.மீ. தொலைவில் `சீதா எலிய’என்னுமிடத்தில் சீதையை மூலவராகக் கொண்ட பிரசித்தி பெற்ற சீதை அம்மன் கோயில் உள்ளது.

இந்தக் கோயில் அருகே ஓடும்ஆற்றில் சீதை நீராடினார் என்பதுஐதீகம். இதனால், இதற்கு சீதா ஆறுஎன்று பெயர். ஆற்றங்கரையில் காலடிகளைப் போன்ற பள்ளங்கள் அனுமார் பாதம் என்று கருதப் படுகிறது. மேலும், இலங்கையில் சீதையை தேடி வந்த அனுமன், முதன்முதலில் சீதையை சந்திப்பதுபோல சிலை ஒன்றும் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

சீதை அம்மன் கோயிலுக்கு இந்தியாவின் வட மாநிலத்தில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக் கோயிலில் கும்பாபிஷேகம் செய்வதற்காக ஓராண்டுக்குமுன்பே புதிதாக தியான மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டி கோயிலில் உள்ள தீர்த்தம் புனரமைப்பு உள்ளிட்டபல்வேறு பணிகள் நடந்து வந்தன.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை சீதை அம்மன் கோயிலின் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சீதை அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெற்றன. கும்பாபிஷேக விழாவுக்கு நுவரெலியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இலங்கை எம்.பி.க்கள் வேலுகுமார், வடிவேல் சுரேஷ் ரட்ணாயக்க, மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தியாவிலிருந்து மஹாராஜ், வாழும் கலை அமைப்பின் அறங்காவலர்   ரவிசங்கர், சுவாமி ஜகதாத்மானந்தா சரஸ்வதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

முன்னதாக கும்பாபிஷேகத்தை யொட்டி அயோத்தியில் உள்ளசரயு நதியில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம், திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்ட 5ஆயிரம் லட்டுகள், கோயம்புத்தூரில் இருந்து கொண்டுவரப்பட்ட 8 கலசங்கள், நேபாளத்தில் இருந்துகொண்டு வரப்பட்ட சீர்வரிசைகள்கொழும்புவில் உள்ள மயூரபதி அம்மன் கோயிலில் இருந்து ஊர்வலமாக சீதா எலியவுக்கு வெள்ளிக் கிழமை கொண்டு வரப்பட்டன. இந்த சீர்வரிசை ஊர்வல நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் கலந்துகொண்டனர்.