இலக்கியவாதிக்கு இதம் செய்யும் ஈசன்

அருளில்லார்க்கு அவ்வுலகில்லை; பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை! இது ஆன்றோருக்கு மட்டுமல்ல ஆண்டவனுக்கே தெரிந்த உண்மை. அதனாலேயே தருமி என்ற ஏழைப் புலவனுக்கு, தாமே கவிதை எழுதித்தந்து மன்னனிடம் பரிசில் பெறச் செய்தார், மதுரை சோமசுந்தரக் கடவுள். இலக்கியவாதிக்கு மட்டுமா? இசைவாணருக்கும் அருளியவர் ஈசன்.

ஏழ்மையில் தவித்த பாணபத்திரருக்கு பொன்னும், பொருளும் வழங்குமாறு சேரமான் பெருமாளுக்கு சிபாரிசு கடிதமே எழுதினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இதுதான் ‘மேலிடத்து சிபாரிசு’ – டிவைன் இன்டர்வென்ஷன். பொருளுக்காக சிபாரிசு செய்தது போல் அருளுக்காகவும் சிபாரிசு செய்தார் ஈசன்.

உமாபதி சிவாச்சாரியாருக்கு எழுதிய கடிதத்தில், சிதம்பரம் கோயில் மடப்பள்ளிக்கு விறகு அளித்து வரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சாம்பனுக்கு “சிவ தீட்சை” அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தார். கடித இலக்கியத்திற்கு முன்னோடி ஈசன். அவர் சமுதாய நல்லிணக்கத்தின் முன்னோடியும் கூட. சரி தானே ?

நீர்த்துளியை குறிக்க துமி என்ற பதத்தைப் பயன்படுத்தினார் கம்பர். அப்படி ஒரு சொல் இல்லையென மறுத்தார் ஒட்டக்கூத்தர். சரஸ்வதி தேவி மாறுவேடத்தில் வந்து துமி, சரி தான் என்று சொன்னதும் டிவைன் இன்டர்வென்ஷன்.

பன்மொழியில் தெய்விக இலக்கியங்கள்….
ஜெயதேவர் இயற்றிய அஷ்டபதியில் சில சொற்களை மாற்றி எடிட் செய்தான் ஜெகந்நாதன் ஆன கண்ணபிரான். இதுவும் டிவைன் இன்டர்வென்ஷன் தான்.

ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் பாடிய கிருஷ்ண கானத்தை குழந்தை கண்ணனே மடியிலமர்ந்து ரசித்ததாக சமிக்ஞை தெரிந்ததாம். அதனால் அவர் தொடையில் தட்டி தாளம் போடமாட்டார்.

நாராயண பட்டத்ரி சமஸ்கிருதத்தில் நாராயணீயம் பாடப் பாட, குருவாயூரப்பனே தலையசைத்துக் கேட்டான்.

மிலேச்சர்களின் கொடுமையிலிருந்து மீள, சனாதனத்தின் மீது நம்பிக்கை வளர, குமரகுருபரரின் தூண்டுதலால், துளசிதாஸர் அவதி மொழியில் ராமாயணம் இயற்றினார்.
ஒரே இரவில் சமஸ்கிருதத்தில், “பாதுகா சஹஸ்ரம்” இயற்றினார் வேதாந்த தேசிகர். கவிதார்கிக கேஸரி என்று ஸ்ரீ ரங்கநாதரால் வாழ்த்தப்பெற்றார்.

துஞ்சத்து எழுத்தச்சன் மலையாளத்தில் இயற்றிய “அத்யாத்ம ராமாயணம்” கண்ணனால் அங்கீகரிக்கப்பட்டது. இன்றும் சிறந்த வெகுஜன இலக்கியமாகத் திகழ்கிறது.

திருவையாற்றில் தியாகையர் உருகி உருகிப் பாடிய தெலுங்கு கீர்த்தனைகளை செவி குளிர ரசித்தான் ஹனுமன். தியாகராஜர் வேண்டுகோளுக்கிணங்கி இராமன், சீதையுடனும், இலட்சுமணனுடனும் தியாகராஜருக்கு காட்சியளித்தார்.

பத்ராசலம் ராமதாஸர் இயற்றிய ராம கீர்த்தனைகள் பட்டி தொட்டியெல்லாம் பிரபலம். அரசு கஜானாவின் பணத்தை வைத்து ஆண்டவனுக்கு கைங்கர்யம் செய்து சிறை சென்றவர்.

இவரைக் காப்பாற்ற ராம லட்சுமணரே நேரில் வந்ததாகச் சான்று.ஆந்திரத்து மணிவாசகர் போலும்!

கனகதாஸரின் கன்னடப் பாடல்களை ரசித்து அவருக்காக கிழக்கிலிருந்து, மேற்கே திரும்பி மத்தால் சுவற்றில் துளையிட்டு காட்சி தந்தான் உடுப்பி கிருஷ்ணன்.

                                                                                                                                                                                       ….வளரும்