இறுதிகாலம் வரை சங்கப்பணி செய்த ராமகிருஷ்ணன் ஜி

ஆர்.எஸ்.எஸ் சாமான்யர்களையும் அசாதாரமானவர்களாக மாற்றுகிறது. அந்தவகையில் சாதாரண குடும்பத்து நபர் சங்க தொடர்பின் மூலம் சமூகப் பணியும் செய்து, தனது குடும்பத்தையும் திறம்பட நடத்தி சங்க கார்யகர்த்தர்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்ட, ராமகிருஷ்ணன் ஜியைப் பற்றி இந்த இதழில் அறிவோம்…

சுப்பையா – சிவந்திக்கனி தம்பதியினருக்கு மகனாக, 1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் தாண்டவன்காடு என்னும் ஊரில் பிறந்தார், ராமகிருஷ்ணன் ஜி. தனது பள்ளிப்படிப்பை உடன்குடியில் நிறைவு செய்து, பி.எஸ்.சி. (கணிதம்) கல்லூரிப் படிப்பை திருநெல்வேலியில் படித்தார்.

தனது இளமைப் பருவத்திலேயே சுவாமி விவேகானந்தர் மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டதால், விவேகானந்தரைப் பற்றிய புத்தகங்களை விரும்பிப் படிப்பார். கிறிஸ்தவப் பள்ளியில் படித்ததால், பைபிளிலும் நன்கு தேர்ச்சிப் பெற்றார்.

ஒரு முறை பாடம் நடத்தும் போது, ஆசிரியர் ஒருவர் கிறிஸ்தவர்கள் வருகை புரிந்த பின்னரே, நமது நாட்டில் உள்ள ஏழை, எளியவர்களுக்கு நிலம் கிடைத்தது என்று கூறியவுடன் கோபம் கொண்ட ராமகிருஷ்ணன் ஜி, அந்த ஆசிரியரை நோக்கி, ஆங்கிலேய கிறிஸ்தவர்கள் தங்களின் கப்பலில் நிலத்தை எடுத்துக் கொண்டு வந்தார்களா? அல்லது இறக்குமதி செய்தார்களா? என கேள்வி கேட்டார்.

கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு, சென்னையில் உள்ள சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை படித்தார். ஜூனியராக திருநெல்வேலியில் வழக்கறிஞர் கருப்பையா அவர்களிடம் பணிபுரிந்த பின்னர், தனியாக ஸ்ரீவைகுண்டத்தில் வழக்கறிஞர் தொழிலை தொடங்கினார். துக்ளக் பத்திரிகையை விரும்பி படிப்பார் ராமகிருஷ்ணன் ஜி.

அதில் ஒருமுறை, சங்கத்தின் மூத்த பிரச்சாரக்கான சூரிஜியின் கடிதம் பிரசுரமாகி இருந்தது. அதனைப் படித்து ஊக்கமடைந்து, சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். தினசரி ஷாகா வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதில் திறமையான பல கார்யகர்த்தர்கள் தயாராகினர்.

ஸ்ரீவைகுண்டம் நகர் சங்கசாலக்காகவும் (தலைவர்), பின்பு ஸ்ரீவைகுண்டம் தாலுகா சங்கசாலக்காகவும், பின்னர் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம் ஆகிய 3 தாலுகா சங்கசாலக்காகவும், பிறகு தூத்துக்குடி ஜில்லா சங்கசாலக்காகவும், தூத்துக்குடி ஜில்லா இரண்டாக பிரிந்தவுடன் திருச்செந்தூர் ஜில்லா சங்கசாலக்காகவும் இருந்தார்.

தினசரி ஷாகாவுக்கு யார் வரவில்லை என பட்டியல் எடுப்பார், அடுத்த நாளே அவர்களின் வீட்டுக்கு சென்று பார்த்து வருவார். பால ஸ்வயம்சேவக் வீடுகளுக்கு செல்லும் பொழுது, பெற்றோர்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும். ஒரு வழக்கறிஞர், தனது மகன் விளையாட வரவில்லை என தேடி வந்துள்ளாரே? என நினைத்து, அடுத்த நாள் முதல் அவர்கள் தனது மகனை ஷாகாவுக்கு அனுப்பி வைப்பார்கள்.

அந்த காலகட்டத்தில் சங்கம் வளர்வது, சங்கத்தின் இயக்கங்கள் வளர்வது என்பது கடினமான காரியம். ஒருமுறை இந்து முன்னணி சார்பில் முன்னாள் அமைச்சர் கே.பி. கந்தசாமிக்கு எதிராக பரமன்குறிச்சியில் வைக்கப்பட்ட பெயர் பலகை, இரவோடு இரவாக காவல்துறையினர் அகற்றி விட்டனர்.

தொலைபேசி மூலம் தகவல் தெரிந்த உடன், ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து இரவு 12 மணிக்கு கிளம்பி சென்று அங்கு கூட்டத்தைக்கூட்டி, எல்லோரையும் சாலையில் அமர வைத்து பதாகை திரும்ப வரவேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டத்தை தொடங்கினார். காவல்துறை அதிகளவில் குவிக்கப்பட்டது.

ஏ.டி.எஸ்.பி லத்தி சார்ஜ் செய்யப்படும், கலைந்து செல்லுங்கள் என்றார். உடனடியாக எழுந்து நின்ற ராமகிருஷ்ணன் ஜி, அடிபட்டாலும் இந்த இடத்தை காலி செய்ய மாட்டேன் என எண்ணம் உள்ளவர்கள் மட்டும் இங்கே அமரவும், மற்றவர்கள் எழுந்து செல்லவும் என்றார். பலர் அங்கேயே அமர்ந்தனர்.

அருகில் இருந்த இன்ஸ்பெக்டர், இவர் சொல்வது மட்டும் இல்லை, அதன்படி செய்து விடுவார் என ஏ.டி.எஸ்.பி. ஐ சமாதானம் செய்து, திரும்பவும் அதே இடத்தில், பெயர் பலகை வைக்கப்பட்டது.

சமுதாயத்தில் பெரிய நபர்களை சங்க நீரோட்டத்தில் கலப்பதில் சிறந்தவர். முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு சகோதரர் வேலு அவர்களை சங்கத்தில் இணைய வைத்தார். நல்லகண்ணு அவர்களின் மகள் ஆண்டாளை, சங்க நிகழ்ச்சியில் தலைமை தாங்க வைத்தார். சாம்சன் டேனியல் என்ற பிரபல வழக்கறிஞரை, குருபூஜை நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க வைத்தார்.

எல்லாவற்றிலும் சங்க கண்ணோட்டத்தில் பார்க்கும் பழக்கம் இருந்ததால், தனது மகள் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சியில், சங்க கண்ணோட்ட சிறப்புரை இருக்க வேண்டும் என்று முடிவு செய்து, சண்முகநாதன்ஜியை அழைத்தார். கிறிஸ்தவர், முஸ்லிம் நபர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். ஏன் என கேட்டதற்கு, நமது செய்தியை அவர்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

வழக்கறிஞராக இருந்ததால், கார்யகர்த்தர்கள் குடும்பங்களில் நடக்கும் பிரச்சினைகளில் உடனிருந்து முழுவதுமாக தீர்த்து வைப்பார். வேலையில்லாமல் இருக்கும் கார்யகர்த்தர்களுக்கு வேலை கிடைக்க முனைப்பாக இருப்பார். தான் மட்டுமல்லாது, தனது மனைவியையும் “சமிதி” பணிகளில் ஈடுபடுத்தினார்.

பட்டியல் சமுதாயப் பகுதிகளில் சங்கம் செல்ல வேண்டுமென்று முடிவு செய்து, அதன்படி புறையூர், ராமசாமிபுரம் பகுதிகளில் மாதக்கூடுதல் ஆரம்பித்து, பட்டியல் சமுதாய இளைஞர்களை சங்கப்பணியில் ஈடுபடுத்தினார்.

சங்கசாலக்காக இருந்ததால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கார்யகர்த்தர்களின் விலாசம் இருக்கும். வெளியூர் செல்லும் பொழுது, அதனை உடன் எடுத்துச் செல்வார். ஏற்கனவே அவர்கள் அறிமுகமாக இல்லாதவர்கள் என்றாலும், அவர்களை தேடிச் சென்று பார்த்துவிட்டு வருவது வழக்கம்.

1972ல், சவிதா தேவி அம்மாளை திருமணம் செய்த ராமகிருஷ்ணன் ஜிக்கு, ராஜேஷ் விவேகானந்தன், பிரகாஷ் என்ற இரு மகன்களும் ஜெயந்தி காயத்ரி என்ற மகளும் உள்ளனர். தந்தை, தாய் மற்றும் மூன்று பிள்ளைகள் என குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சங்க வேலை செய்ததுடன், அடுத்த தலைமுறை பிள்ளைகளும் சங்கப்பயிற்சி முகாம்களை முடித்து, சங்கப்பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

வழக்கறிஞர் தொழிலில், 50 வருடங்களை கடந்த ராமகிருஷ்ணன் ஜி, 2021 டிசம்பர் 17 அன்று காலமானார். இறுதிகாலம் வரை சங்கப்பணியை செய்த ராமகிருஷ்ணன் ஜி, நம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமான ஸ்வயம்சேவக்காக திகழ்கிறார்.

-அ.ஓம்பிரகாஷ்