தேசியவாதிகளால் வளர்ந்ததே தமிழ்
ஆர்.பி.வி.எஸ். மணியன் எழுதி வெளியிட்டுள்ள யார் தமிழர்? என்ற புத்தக வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
அண்மைக் காலமாக தமிழகத்தில் வெறுப்பு, பிரிவினை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்ற சில குழுக்கள் தமிழகத்தை தமிழன்தான் ஆள வேண்டும் என்று சொல்லி வருகிற தலைவன், தமிழன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்பெல்லாம் சில எழுத்தாளர்கள் கதை, கவிதை, கட்டுரைகளை புனைபெயர்களில் எழுதுவார்கள். இப்போது கட்சி நடத்துகிற பலர் தங்களது கிறிஸ்தவ பெயரை மறைத்துவிட்டு புனைபெயர்களில் கட்சி நடத்துகின்றனர்.
இவர்கள் பிரச்சாரம் செய்து வருகிற ஆரிய திராவிட இன வாதம், சமஸ்கிருத எதிர்ப்பு, ஹிந்தி எதிர்ப்பு, ஹிந்துத்வ எதிர்ப்பு என்பதெல்லாம் ஏமாற்று பிரச்சாரங்களே.
திராவிட இயக்கங்களின் தந்தை என்று அழைக்கப்படுகிற ஈ.வெ.ராமசாமி நாயக்கர் போன்றோரின் முகத்திரையை கிழித்தெறிந்துள்ளார் மணியன். இவர்கள் தமிழுக்கென்று செய்த தொண்டுகள் என்று ஏதாவது ஒன்றை குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா? தமிழ் வளர்ந்தது தேசியவாதிகளால்தான் என்பதை அற்புதமாக விளக்குகிறார்.
தமிழகத்தை குட்டிச் சுவராக்கிய திராவிட இயக்கங்களிலிருந்து தமிழ்நாடு மீள வேண்டும். தமிழகம் எப்போதும் தேசியத்தின் பக்கமே என்பது நிலைநிறுத்தப்பட வேண்டும்.
ஒவ்வொரு தேசபக்தரும் அவசியம் படிக்க வேண்டிய அற்புதமான புத்தகம்.
பக்கங்கள் 200. விலை ரூ. 140
கிடைக்குமிடம்: வர்ஷன் பிரசுரம் சென்னை 17
போன்: 9940682929
– காந்திமதி
இரு பெரும் சான்றோர் சிந்தனைகளின் இனிய சங்கமம்
சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை (பாகம் 3) என்கிற எளிய தலைப்பில் எண்ணற்ற கருத்துக்களை வழங்கியிருக்கிறார் நூலாசிரியர்.
அவதார புருஷர்களான விவேகானந்தரையும் பாரதியாரையும் நம்முன் நிறுத்தியிருக்கும் சுவாமிஜியின் ஆவலும் உயர்நோக்கமும் ஒவ்வொரு எழுத்திலும் ஊடாடுகின்றன. இது இன்றைய இளைஞர்களுக்கான `புதிய கீதை’
சகோதரி நிவேதிதையை தம் மானசீக குருவாய் கொண்டாடிய பாரதி, லட்சியப் பெண்கள் குறித்த சுவாமிகளின் இலக்கணத்தை தம் எழுத்தில் வீரியத்துடன் நிலைநாட்டுகிறார். பாரத குமாரிகள் என்கிற தலைப்பல் அவர் படைத்திருக்கும் கட்டுரை சுவாமிஜியின் நோக்கத்தை பறைசாற்றுகிறது.
பகவத் கீதையின் சாரத்தை அமுதமாய் அள்ளித்தரும் அன்பும் ஜாதியக்குற்றம் என்று சமூகத்தை சாடும் கோபமும் வேதரிஷிகளின் கவிதை என்று நம் ஞானிகளை விஞ்ஞானிகளாய் பார்க்கும் தீர்ககதரிசனமும் லோககுருவாய் சுவாமி விவேகானந்தரை அடையாளப்படுத்தும் அற்புதமுமாய் எல்லையற்ற வானம் போல் விரிந்துகொண்டேபோகின்றன பாரதியின் எண்ணங்கள்.
காந்திஜியின் இராம கிருஷ்ண மடத்துடனான நெருக்கமும் ஜகீதஷ் சந்திர போஸின் விஞ்ஞான தாகமும் இந்தப் புத்தகத்தில் படிக்கக் கிடைக்கிறது.
இன்றைய இளைஞர்கள் படித்துப் பயன்பெற வேண்டிய பொக்கிஷம் இந்நூல். நம்மை அழுத்தும் மனச்சுமையிலிருந்து விடுபட நம் முன்னோர்களைப்பற்றி அறிவதும் பெருமித முறுவதும் ஓரு சஞ்சீவினியாகும். அந்த உந்துசக்தியை அற்புதமாய் தந்திருக்கிறார் சுவாமி கமலாத்மானந்தர்.
பக்கங்கள். 450. விலை ரூ. 200
கிடைக்குமிடம் :
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் சென்னை
– சிவரஞ்சனி