இரும்பு மனிதர்

நவீன சுதந்திர பாரதத்தின் சிற்பி சர்தார் வல்லப்பாய் படேலைப் பற்றி இன்றைய இளைய தலைமுறையினர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். சுதந்திர போராட்ட காலத்தில் காந்தியின் உரையைக் கேட்டு, வக்கீல் தொழிலை உதறி தேசிய இயக்கத்தில் இணைந்தார். பல செயற்கரிய பணிகள் ஆற்றினார். பார்டோலி என்ற இடத்தில் விவசாயிகளுக்காக அவர் செய்த சத்தியா கிரகப் போராட்டத்தில் வெற்றி கிடைத்தது. அப்போதிலிருந்து மக்கள் அவரை ‘சர்தார்’ என்று அன்போடு அழைத்தனர்.

பிரிட்டிஷ் அரசிடம் இருந்து விடுதலை பெற்றபோது பாரதம், சிற்றரசர்கள் கீழ் உடைபட்டு தனித்தனி ராஜ்ஜியங்களாக இருந்தது. பாரதம் விடுதலை பெற்றாலும் இந்த ஒற்றுமையின்மையால் உருப்படாது என்று பலரால் எள்ளி நகையாடப்பட்டது. இந்நிலையில் இரும்புக்கரம் கொண்டு அனைத்து (565) சமஸ்தானங்களையும் ஒன்றிணைத்து புதிய பாரதத்தை உருவாக்கினார் படேல். அவர் மட்டும் இல்லை என்றால், நாம் இன்று காணும் அழகிய பாரதம் நம்மிடம் இருந்திருக்காது, நம் தேசம் இன்று பல எதிரிகளால் சூறையாடப்பட்டு இருக்கும். நாம் இன்று உரிமை என்று அனுபவிக்கும் சுதந்திரக் காற்றும், வளமான வாழ்க்கையும் கானல் நீராகதான் இருந்திருக்கும். அவர் எதிர்பார்த்த முழுமையான பாரதம் என்பது அவ்வளவு எளிதாக அமையவில்லை. அந்த இலக்குக்காக சகல வழிகளையும் பின்பற்றினார். சர்ச்சைகள், எதிர்ப்புகள் எழுந்தாலும் அவற்றை தீரத்துடன் சமாளித்தார்.

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற இந்திய அரசு ஊழியர்கள் அமைப்பினை உருவாக்கினார். இதனால் அகில இந்திய குடிமைப் பணிகளின் தந்தை என புகழப்பட்டார். பாரதத்தின் முதல் துணைப் பிரதமர், முதல் உள்துறை அமைச்சர், பாரத பாகிஸ்தான் போரின் போது பாரத ராணுவத்தின் தலைமைத் தளபதி, தகவல், ஒளிபரப்புத் துறை அமைச்சர், அரசியலமைப்புச் சபையில் அடிப்படை உரிமைகள், பழங்குடியின மற்றும் விலக்கப்பட்ட பகுதிகள், சிறுபான்மையினர் மற்றும் அரசியலமைப்பு ஆகியவற்றுக்கு பொறுப்புடைய குழுக்களின் தலைவர் என பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக செயல்பட்டார். அரசியலமைப்பை உருவாக்கும் பணிக்காக அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களை நியமித்தவரும் படேல்தான்.

பாரத விடுதலைக்கு அவர் ஆற்றிய செயற்கரிய செயல்களும், விடுதலை பெற்ற பாரதத்தின் உயர்வுக்கும் நன்மைக்கும் அவர் முன்னெடுத்து செய்த ஒப்பற்ற காரியங்களும் தான் அவரின் ‘இரும்பு மனிதர்’ என்ற அவரின் பெயருக்கான காரணம். சர்தார் வல்லபாய் படேல் மட்டும் அன்று நம் தேசத்தின் முதல் பிரதமராக ஆகியிருந்தால் நம் தேசம் என்றோ வல்லரசாகியிருக்கும் என்பது திண்ணம்.

சர்தார் வல்லபாய் படேலின் நினைவு தினம் இன்று.