‘மிக்ஜாம்’ புயலின் கோரதாண்டவத்தில் சென்னையின் பல நகர்கள் மிதக்கின்றன. பல இடங்களில் கால்வாய் வாயிலாக கடலில் தண்ணீரை வெளியேற்றும் வகையில், மாநகராட்சி மற்றும் பல்வேறு துறையினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இயல்புநிலை திரும்ப மூன்று நாட்களாகும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் உள்ளிட்ட ஏரிகளின் அதிகப்படியான உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கூவம், அடையாறு, பக்கிங்ஹாம், கொசஸ்தலை ஆறு ஆகியவற்றில் கொள்ளளவை தாண்டி மழைநீர் செல்கிறது. அத்துடன் மிக்ஜாம் புயலின் கனமழையால் தேங்கிய நீரும் சேர்ந்து குடியிருப்பு, மருத்துவமனை உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் சிக்கி தவிக்கின்றன. தரை தளம் வரை மூழ்கி இருப்பதால், பலரும் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
பல இடங்களில் தண்ணீர் வடியாத சூழல் இருப்பதால், பால், மின்சாரம் வினியோகிப்பதில் தொடர்ந்து சிக்கல் உள்ளது. ஒவ்வொரு பகுதியாக மின்சாரம் வழங்கப்படுவதாக, மின் வாரியம் தெரிவித்துள்ளது. ஆனாலும், பல பகுதிகளில் மின்சாரம் இல்லாததால், சமையல் செய்ய முடியாமலும், சுகாதார பணிகளை செய்ய முடியாமலும், குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.
எனவே, தண்ணீரை வடியவைக்க மாநகராட்சி, காவல், பேரிடர் மீட்பு, தீயணைப்பு உள்ளிட்ட பல்துறைகள் இணைந்து, இரவு பகலாக தீவிர பணியாற்றி வருகின்றனர்.
குறிப்பாக, 70க்கும் மேற்பட்ட படகுகள் வாயிலாக, தாழ்வான பகுதிகளில் சிக்கியுள்ளோரை மீட்டு வருகின்றனர். பிரதான சாலையில் இருந்த மழைநீர் உடனடியாக அகற்றப்பட்ட நிலையில், உட்புற மற்றும் குடியிருப்புகளில் தேங்கியுள்ள மழைநீரை மின் மோட்டார்கள் வாயிலாக அகற்றப்பட்டு வருகிறது. அதேநேரம், ‘அடையாறு, கூவம் கரையோரங்களில் உள்ள குடியிருப்புகளில் தேங்கியுள்ள மழைநீர் வடிய, குறைந்தது மூன்று நாட்கள் வரை ஆகும்’ என, அதிகாரிகள் தெரிவித்தனர்.