தொடர் வெள்ளத்தாலும் கடுமையான வறட்சியாலும் பந்தாடப்பட்ட பிஹாரிலுள்ள ஹர்புர் போச்ஹா கிராமத்தவர்களால் எப்படி தன் கிராமத்தை இந்தியாவுக்கே முன்னுதாரணமாக்க முடிந்தது? இதற்கு மூளையாகச் செயல்பட்டவர் கிராமப் பஞ்சாயத்துத் தலைவரான பிரேம் ஷங்கர் சிங். 3,000 ஏக்கர் நிலத்துக்குத் தண்ணீர் பாய்ச்சி பசுமையாக்கும் கனவோடு கிராமத்தவர்களை ஒன்றுசேர்த்து வறண்டு கிடந்த பிரம்மாண்ட நிலத்தில் மூன்று குளங்களைத் தொடங்கியதுதான் ஆரம்பப் பணி. அடுத்த 15 ஆண்டுகளுக்குள் 17 ஆயிரம் மரங்களை உருவாக்கியிருக்கின்றனர் ஹர்புர்வாசிகள். இயற்கைக்குப் பங்களித்தால் அது நமக்குத் திருப்பிச்செய்யும்தானே? பழங்கள் தரும் மரங்களாலும், மீன்கள் தரும் குளங்களாலும் ஹர்புர்வாசிகளின் மாதச்சம்பளம் மூன்று மடங்கு உயர்ந்திருக்கிறது. ஒரு நல்ல தலைமையும், அதற்கு ஒத்துழைக்கும் கூட்டமும் வாய்த்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இது ஓர் உதாரணம்!