பாரதத்தின் தென் பகுதியில் உள்ள மக்களுக்கு என்றும் ஆரோக்கியமாக வாழ உணவாகவும் மருந்தாகவும் இறைவன் அளித்த இயற்கைக் கொடைகள் இரண்டு. அதில் ஒன்று தேங்காய் மற்றொன்று வாழைப்பழம். இவை இரண்டும்தான் வருடத்தில் 365 நாட்களும் விளையும் இயற்கை உணவு பொருட்கள். இது மனிதனுக்காகவே படைக்கப்பட்டது. மனிதன் மட்டுமே இதனை மட்டை உரித்து சாப்பிட முடியும். மற்ற விலங்குகளுக்கு அது கடினம்.
இறைவனுக்கு நாம் படைக்கும் நிவேதனத்தில் தேங்காயும் வாழைப்பழமும் மிகவும் முக்கியமானது. இது உண்மையில் இறைவனுக்காக சொல்லப்பட்டது மட்டுமல்ல, நமக்காகவும் சொல்லப்பட்டதுதான். இவைகளை மட்டுமே உணவாக எடுத்துக்கொண்டால் என்றும் நோயின்றி வாழலாம் என இயற்கை மருத்துவத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தென்னம்பூவில் இருந்து தேங்காய் முழுதாக உருவாவதற்கு 10 மாதங்கள் தேவை. இது மனித கர்ப காலத்திற்கு சமமான காலம். இறக்க உள்ளோரின் வாயில் பால் ஊற்றுவது தொன்றுதொட்டு உள்ள நடைமுறை. ஆனால், இப்படி தரவேண்டியது மாட்டுப்பால் அல்ல, தேங்காய்பால்தான். தேங்காய் பாலை கொடுப்பதால் அவர்களுக்கு நோய் நீங்கி ஆரோக்கியம் கிடைக்கும் என்பதற்காகவே சொல்லப்பட்டது இது.
ஆரோக்கியமான மனிதன் தேங்காயை எப்படி எடுத்துக்கொள்வது, அது கொலஸ்டிரால் எனப்படும் கொழுப்பை அதிகரித்துவிடாதா என்ற சந்தேகங்கள் அனைவருக்கும் இருக்கும். தேங்காயை முற்றியதாக, பச்சையாக, உடைத்த ஒரு மணி நேரத்திற்குள்ளாக சாப்பிடுவது நல்லது. தேங்காயை பாலாக அருந்தினால் அதில் நமக்குக் கிடைக்க வேண்டிய நார் சத்து உள்ளிட்டவை கிடைக்காமல் போகும். ஆனால் வயதானவர்கள் அதனை நீர்த்து, சர்க்கரை சேர்க்காமல் கொள்ளலாம்.
தேங்காயை மட்டுமே மூன்று வேளை உணவாகவும் குடிக்க தேங்காய் தண்ணீர், இளநீர், சாதாரண நீர் என சில மாதங்கள் தொடர்ந்து எடுத்துக்கொண்டு அனைத்து நோய்களில் இருந்தும் விடுபட்டு ஆரோக்கியம் பெற்றோர் குறித்த பல குறிப்புகள் ‘நல்வழ்வு ஆசிரமம்’ என்ற இயற்கை மருத்துவமனையை அமைத்து தொண்டு புரிந்த இயற்கை ஆர்வலர் ராமகிருஷ்ணரின் புத்தகங்களில் உள்ளன.
தேங்காயை மட்டுமோ அல்லது அதனுடன் பழங்களை சேர்த்தோ ஒரு முழுவேளை இயற்கை உணவாக எடுத்துக்கொள்ளலாம். தேங்காயை சமைத்தால் அது கெட்ட கொழுப்பாகலாம். அப்படியே பச்சையாக எடுத்துக்கொண்டால் அது உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்புதான். எனவே அச்சம் வேண்டாம். சமையலில் தேங்காயை சூடாக்காமல் கடைசியாக சேர்த்து மட்டுமே பறிமாறலாம்.