கடந்த 5 ஆண்டுகளாக பாரத பாதுகாப்புத் துறை புது உத்வேகத்தோடு செயல்படுகிறது. முன்பு இருந்த நத்தை வேக நடைமுறைக்குப் பதிலாக பாரத ராணுவ நிர்வாகம் அதிநவீன ஆயுதங்களைத் தாங்கி வீரர்களின் ஒவ்வொரு தேவையையும் நிறைவேற்றியபடி வானிலும் மண்ணிலும் கடலிலும் கொடி கட்டிப் பறக்கிறது. டில்லி வார இதழ் பாஞ்சஜன்ய ஆசிரியருக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில் இன்னும் பல ஊக்கம் தரும் தகவல்கள், உங்களுக்காக.
புல்வாமாவில் 40 ஜவான்கள் பலியாகிறார்கள்; பாகிஸ்தானில் உட்கார்ந்து கொண்டிருக்கும் ஜெய்ஷ்-இ-முகமது இதற்குப் பொறுப்பேற்கிறது; மக்கள் கொதிப்படைகிறார்கள்; இவற்றுக்கெல் லாம் நடுவில் தேசத்தின் தலைமை முன்னெப் போதும் கண்டிராத உறுதி காட்டுகிறது. பாரதம் மாறி விட்டதா என்ன?
நிச்சயமாக. புல்வாமாவில் நமது வீரர்கள் 40 பேர் பலியானதற்கு பழிவாங்க சபதம் ஏற்றோம் பயங்கரவாதத்திற்கு ஊட்டம் அளித்து வரும் சக்திகளை அழிக்க உறுதி பூண்டோம். மக்கள் உணர்வைப் புரிந்துகொள்ளும் திடமான தலைமை, ராணுவத்தின் திறன் இரண்டும் அற்புதமாக இணைந்ததால் பாரதம் மாறியது. மக்களுக்கு இந்த இரண்டும் குறித்து பெருமிதம் உண்டு, இந்த இரண்டிலுமே நம்பிக்கையும் உண்டு. புல்வாமா சம்பவத்திற்குப் பிறகு மக்களின் ஆவேசம் உச்சத்தைத் தொட்டது இயல்புதான். மக்கள் மனதில் சோகமும் கவிந்தது. அத்துடன் பாகிஸ்தான் சொல்படி நடக்கும் அக்கிரமங்கள் குறித்து கோபம் இருந்தது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மீது பாரத அரசு எப்போது நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று மக்கள் அரசை கேட்டு வந்தார்கள். மக்களின் மனநிலையைப் புரிந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி பதிலடி நிச்சயம் உண்டு என்று பலமுறை உறுதி கூறினார். அரசு உறுதி பூண்டது, ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளித்தது. இது புதிய பாரதம். பயங்கரவாதத்தை சகித்துக்கொண்டு இருக்கப்போவதில்லை இந்த தேசம். பயங்கரவாதத்தை பரப்புகிற அல்லது அதற்கு ஊட்டமளிக்கிற எவருக்கும் கடும் பதிலடி கொடுக்கும்.
புல்வாமாவில் பாதுகாப்புப் படைகள் மீதான தற்கொலைத் தாக்கு தல் முதல் தடவையா என்ன? இல்லை. இதற்கு முன் கூட, பாதுகாப்புப் படைகள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் தாக்கப் பட்டுள்ளன. பாதுகாப்புப் படை களின் மீது இத்தகைய தாக்குதல் மறுபடி நடக்காமலிருக்க எவ்வித உறுதியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது?
காஷ்மீரில் இத்தகைய தாக்குதல்கள் நடைபெற்று வருவதையும் இது பாகிஸ்தானின் கடைசி தாக்குதல் அல்ல என்பதையும் நான் ஒப்புக்கொள்கிறேன். அதனால்தான், இத்தகைய தாக்குதல்கள் மீண்டும் நடக்காது என்பதில்லை. நமது வீரர்களை இனியும் தியாகம் செய்ய முடியாது என்பதால் நாம் இந்த திசையில் எல்லா முயற்சிகளையும் செய்கிறோம் என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எங்களது ஆட்சி அமைந்த நாள் தொடங்கி அண்டை நாடுகளுடனான உறவை மேம்படுத்த பிரதமர் நரேந்திர மோடி இடையறாமல் முனைந்து வருகிறார். பதவிப் பிரமாண நாள் நிகழ்ச்சிக்குக்கூட அண்டை நாடுகளின் அதிபர்களை அழைத்திருந்தார். அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள், “நாம் நமது நண்பர்களைத் தேர்வு செய்துகொள்ள முடியும்; ஆனால் அண்டை நாடுகளை அல்ல” என்று சொல்வார்.நமது பிரதமர் அந்த கருத்தை மனதில் கொண்டு எல்லோருடனும் நல்லெண்ணத்தோடு பேச்சு வார்த்தை நடத்தி இனிய உறவு ஏற்படுத்த சதா முயன்று வருகிறார். ஏனென்றால், அண்டை நாடுகளுடன் நல்லுறவு நமது ரத்த நாளங்களில் உள்ளது தான்.
ஆனால் அதே நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் தான் சர்ஜிகல் ஸ்டிரைக்கும் நடந்தது. பயங்கரவாதத்தை நிர்மூலமாக்கும் பணியும் நடைபெற்றது. அதாவது அண்டை வீட்டுக்காரன் என்ன வேண்டுமானாலும் செய்வான், நாம் கைகட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்போம் என்பது அல்ல நிலை. அதுதான் சேதி. வலிக்கிறாற் போல பதிலடி கொடுக்கவும் நமக்குத் தெரியும். ஏனென்றால், நமது அரசுக்கு நல்லுறவை உருவாக்கவும் தெரியும்; அதேசமயம் அராஜகத் தின் மீது நடவடிக்கை எடுக்கவும் தெரியும். இனி அராஜகம் நடமாட இந்த அரசு அனுமதிக்காது. அதுமட்டுமல்ல, பாகிஸ்தானை உலக அரங்கில் தனிமைப்படுத்தி வைப்பதற்கும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம். உலகில் பாரதம் தன்னுடைய கருத்தைத் திட்டவட்டமாக முன்வைக்க முடிகிறது; அதில் நமக்கு வெற்றியும் கிடைக்கிறது.
பதான்கோட், உரி, மும்பை தாஜ் ேஹாட்டல் இவற்றின் மீதான தாக்குதல்கள்; அதையடுத்து இப்போது புல்வாமாவில் கோரமான தாக்குதல். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஒவ்வொரு முறையும் பாகிஸ்தான் தனக்கு இதில் தொடர்பு இல்லை என்று பல்லவி பாடி வருகிறது. எங்களுக்கு தொடர்பு இருப்பதாக பாரதம் நினைத்தால், ஆதாரம் காட்டட்டும் என்றும் பாகிஸ்தான் பேசுகிறது. ஒவ்வொரு தாக்குதலுக்குப் பிறகும் பாரதம் ஆதாரம் கொடுத்து வந்தது. இன்று பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் பாசறை என்பது உலகத்திற்கு தெரிந்து விட்டது. அப்படியிருக்க, பாகிஸ்தானின் லட்சணத்தை அம்பலப்படுத்த உங்கள் வியூகம் என்ன?
ஆதாரம் கொடுக்கிற விஷயம் எங்கள் அரசு மட்டுமல்ல, முந்தைய அரசும் செய்ததுதான். ஆதாரங்கள் கிடைத்த பிறகும் பாகிஸ்தான் தன் மண்ணில் ெகாழுத்து வளரும் பயங்கரவாத அமைப்பு களை ஒடுக்க ஒன்றும் செய்யவில்லை. கொடுக்கப்பட்ட ஆதாரங்களைப் பொய் என்று சொல்வது அல்லது புறக்கணிப்பது, இப்படியாக பாகிஸ்தான் ஆட்டம் காட்டுகிறது. பாகிஸ்தானில் குடியிருக்கிற பயங்கரவாதி ஹபீஸ் சையது, பயங்கரவாதி மெளலானா அசார் மசூது போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மனமில்லாமல் இருந்து வருகிறது. எனவே இந்தப் பிரச்சினையைப் பலமுறை சர்வதேச அரங்குகளில் எழுப்பியுள்ளோம். பயங்கரவாதி என்று தெரிந்தும். இந்த நபர்களை பாகிஸ்தான் சுதந்திரமாக உலவ விட்டிருக்கிறது என்பதையும் உலக அரங்கில் எடுத்துக் காட்டியிருக்கிறோம்.
பாகிஸ்தானுக்கு கிடைத்து வருகிற பணம் எதுவரை போகிறது என்பதையும் உலகத்திற்கு எடுத்துச் சொல்லியிருக்கிறோம். இவற்றின் காரணமாக பாகிஸ்தானை சந்தேகப் பட்டியலில் சேர்த்திருக்கிறார்கள். பாகிஸ்தானை குற்றவாளிப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதற்காக தீவிர முயற்சி செய்து வருகிறோம். பயங்கரவாதம் என்பதை ஐ.நா. சபை வரையறுக்காமலே இருந்து வருவதால், பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளை சமூக அமைப்புகள் என்று சொல்லி பணமும் கொடுத்து ஊட்டமளித்து வருகிறது. ஏன் இதுவரை பயங்கரவாதம் என்பதை வரையறுக்காமல் இருக்கிறீர்கள் என்று ஐ.நா. சபையில் கேள்வி எழுப்பியுள்ளோம். இந்த ஒரு வழியில்தான் என்றில்லை, பயங்கரவாத்தை வேரறுக்கவும் பாகிஸ்தானைத் தனிமைப்படுத்தவும் பல்வேறு முறைகளில் முயற்சி செய்து வருகிறோம். பாகிஸ்தானை தங்களுடைய நட்பு நாடு என்று சொல்லிக் கொள்கிற நாடுகளுக்கும் பாகிஸ்தானின் அக்கிரமங்களைப் பற்றி எடுத்துச் சொல்லி வருகிறோம்.
இந்த முறையும் புல்வாமா தாக்குதல் பற்றிய ஆதாரத்தை பாகிஸ்தானுக்கு கொடுக்கப் போகிறீர்களா?
இதோ பாருங்கள், இதுபற்றி இப்போது விவரமாக எதுவும் சொல்வது முறையாக இருக்காது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். பாகிஸ்தானைத் தனிமைப்படுத்த எது வேண்டுமானாலும் செய்வோம். எல்லா மட்டங்களிலும் முயற்சி செய்வோம்.
ஹபீஸ் சையது, அசார் மசூது, தாவூத் இப்ராஹிம் உள்ளிட்ட எத்தனையோ பயங்கரவாதிகளும் பயங்கரவாத அமைப்புகளும் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளிகள். இந்தக் குற்றவாளி களுக்கு என்றைக்குத்தான் பாரதம் தண்டனை கொடுக்கப் போகிறது? இந்தப் பயங்கரவாத முதலைகளைச் சுற்றி வளைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்பலாமா?
நிச்சயமாக. இதுபோல மக்களும் கேட்கிறார்கள். சிந்தப்பட்ட கண்ணீரின் ஒரு துளிகூட வீண்போகாது, பாரத மக்களின் உணர்வு களை முழுமையாகக் கருத்தில் கொள்வோம் என்று பிரதமரே சொல்லியிருக்கிறார். நாங்கள் எடுக்கும் நடவடிக்கை கடுமையிலும் கடுமையாக இருக்கும்.
காஷ்மீரில் பனி உறைந்த பாதை வழியாகவும் ஆறுகளின் வழியாகவும் பயங்கரவாதிகள் ஊடுருவி இருக்கிறார்கள். இதைக் கண்காணிக்கிறீர்களா?
இந்த எல்லா வழிகளிலும் நடக்கும் ஊடுருவலை உன்னிப்பாகக் கண்காணிக்கிறோம். ஒரு தாக்குதல் நடந்ததை அடுத்து இதுபோன்ற உஷார் நிலை என்பது அல்ல நிலவரம். நமது பாதுகாப்புப் படையினர் எல்லா பாதைகளிலும் கண்காணிப்பு செய்து வருகிறார்கள். ஒரு தாக்குதல் சம்பவம் நடந்துவிட்டால் உடனே சிலர் நமது பாதுகாப்புப் படையினரைக் குறை சொல்லத் தொடங்கி விடுகிறார்கள். ஆனால் இதே பாதுகாப்புப் படையினர்தான் இதற்கு முன்பு எத்தனையோ தாக்குதல் முயற்சிகளை முறியடித்து இருக்கிறார்கள் என்பதை அந்த நபர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நமது ராணுவத்தினரும் துணை ராணுவத்தினரும் களத்தில் மிக உறுதியாகச் செயல்பட்டு வருகிறார்கள் என்பதை மட்டும் நான் சொல்லிக் கொள்வேன்.
பயங்கரவாத சம்பவம் என்பது ஏதோ ஒருநாள் நடக்கிற விஷயம் அல்ல, தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே பயங்கரவாதம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குறிப்பாக காஷ்மீரில் பயங்கரவாதத்தை எதிர்த்து முறியடிக்கும் அனுபவமுள்ள அதிகாரிகளை நியமிப்பதற்கு முன்னுரிமை அளிக்கிறீர்களா? இதில் பின்பற்றப்படும் கொள்கை என்ன?
அனுபவம் என்ற உரைகல் கட்டாயம் தேவை. ராணுவத்திலும் துணை ராணுவத்திலும் ஒவ்வொரு படைப்பிரிவிலும் உள்ள ஜவான் களுக்கும் அதிகாரிகளுக்கும் அவரவர் பணிகளில் திறன் கட்டாயம் உண்டு. இது ராணுவத்திற்குத் தெரியும். எந்த ஜவானை அல்லது அதிகாரியை எங்கே நியமிக்க வேண்டும் என்று ராணுவ உயர் அதிகாரிகளுக்குத் தெரியும். ஜம்மு காஷ்மீரை எடுத்துக் கொண்டால், ராணுவம், துணை ராணுவம், மாநில போலீஸ் இவற்றோடு வேறு சில உள்ளூர் அமைப்புகளும் உண்டு. அவையும் தோள் கொடுக்கின்றன. இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை அதிக நாட்கள் நடைபெற்றது. ஆனால் அதில் ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து பாதுகாப்புப் படையினரையும் பாராட்டுகிறேன். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் அவர்களின் இந்த நல்ல பணிகளை சிலர் சீக்கிரமே மறந்துபோய் குறை சொல்லத் தொடங்கி விடுகிறார்கள் என்பதுதான் வருத்தம் அளிக்கிறது.
புல்வாமாவிலும் சோபியான் பகுதியிலும் பயங்கரவாதம் தொடர்பாக சில சாவல்கள் முளைத்து இருக்கின்றன. ISPR என்று ஒரு பாகிஸ்தானிய அமைப்பு உள்ளூர் இளைஞர்களையும் பள்ளத்தாக்குவாசிகளையும் இணைத்துக் கொண்டு பிரச்சாரம் செய்வதில் இறங்கி இருக்கிறது. பள்ளத்தாக்கில் செயல்படுகிற வாட்ஸ் ஆப் குழுக்களில் ௩ல் ௧ பங்கு குழுக்களின் அட்மின் பாகிஸ் தானைச் சேர்ந்தவராக இருக்கிறார் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. சமூக வலைதளத்தின் இந்த தீய போக்கைத் தடுக்க ஏதாவது செய்வீர்களா?
நீங்கள் சொல்வது உண்மை. நமது அமைப்புகள் இதில் கவனம் செலுத்தி வருகின்றன. கிடைக்கிற எல்லா செய்திகளையும் கண்ணை மூடிக்கொண்டு நம்பிவிட வேண்டாம் என்று பயங்கரவாதம் பாதித்த பகுதிகளில், மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டி வருகிறோம். சமூக வலைதளத்தை ஜாக்கிரதையாகக் கையாண்டு வாருங்கள் என்று மக்களை உஷார்படுத்தி வருகிறோம். ஏனென்றால், இதுபோன்ற சமூக வலைதளக் குழுக்களை நடத்துவோரில் பலர் இந்தியர்கள் அல்ல என்பது எங்களுக்குத் தெரியும். எனவே மக்களை மீண்டும் மீண்டும் எச்சரித்து வருகிறோம்.
நமது பாதுகாப்புத் துறை பல காலமாகவே புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆயுதங்கள் வாங்குவதில் அதி நவீன தொழில்நுட்பம் ஓரங்கட்டப்பட்டிருந்தது. இன்று பாதுகாப்புத் துறை எப்படி இருக்கிறது?
எங்கள் ஆட்சி 2014-ல் அமைந்தபோது, போர் என்று வந்தால் பத்தே நாட்கள் வரைதான் நம்மால் தாக்கு பிடிக்க முடியும் என்கிற அளவுக்கு வெடிமருந்து கையிருப்பு இருந்தது. இதுபற்றி கருத்து செலுத்தினோம். இதுதவிர குண்டு துளைக்காத அங்கி பற்றிய பிரச்சினையும் சேர்ந்து கொண்டது. நமது ஜவான்களுக்கு அந்தப் பாதுகாப்புகூட கிடைக்காமல் இருந்தது. விரைந்து அந்தக் குறையைத் தீர்த்தோம். அடுத்தப்படியாக நமது போர்க்கப்பல்கள் வலுவிழந்து வருகிற தகவல்; அண்டை நாடுகள் இந்த விஷயத்தில் தங்கள் பலத்தை அதிகரித்து வருகின்றன என்றும் கூறப்பட்டது. இதுபோல பல பிரச்சினைகள். அனைத்தையும் எங்கள் அரசு கவனத்தில் கொண்டு செயல்படுகிறது. நான் சொல்வதால் நம்ப வேண்டும் என்பதில்லை. முழுமையான புள்ளி விவரங்கள் உள்ளன; பார்த்துக் கொள்ளுங்கள். எங்கள் ஆட்சி அமைந்ததும் விமானப்படைக்கு தெளிவான குறிப்பு அனுப்பப்பட்டது: ‘உங்களுக்கு என்ன தேவை உண்டோ அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்ளுங்கள். எங்கிருந்து எதை வாங்க வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள்.’ இதற்காக போதிய ஒதுக்கீடு பட்ஜெட்டில் அனுமதிக்கப்பட்டது. இந்த நடைமுறை நீடித்து நடக்கிறது. குண்டு துளைக்காத அங்கிகள் லட்சக்கணக்கில் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.
எங்கள் அரசு பாதுகாப்பு குறித்தும் நமது ஜவான்களின் எல்லா தேவைகள் குறித்தும் கருத்து செலுத்தி வருகிறது என்பதுடன் எந்த வொரு பிரச்சினைக்கும் முழுமையாகத் தீர்வு கண்டு வருகிறது. முன்பெல்லாம் நடவடிக்கை எடுத்ததாக கோப்புகளில் பதிவு இருக்கும். ஆனால் பொருள் வாங்கப்பட்டதா இல்லையா என்பது தெரியாமலே போய்விடும். இப்போது அந்த நிலை அடியோடு மாறிவிட்டது. எங்கள் அரசு அமைவதற்கு முன்பெல்லாம் போர் என்று வந்தால், துப்பாக்கி இருக்கும் தோட்டா இருக்காது; டாங்கி இருக்கும் வெடிமருந்து இருக்காது; ஜவான்கள் இருப்பார்கள் ஆனால் அவர்களுக்கு போதிய அளவில் குண்டு துளைக்காத அங்கி இருக்காது. இந்த நிலவரத்தைப் பார்த்த எங்கள் அரசு பாதுகாப்புத் துறைக்கான எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்தது. இந்த நடைமுறை நீடித்து நடக்கிறது.
ராணுவத்தினர் மத்தியில் பிளவு ஏற்படுத்த சில ஊடகங்களும் சில அரசியல் கட்சிகளும் முயற்சி செய்கின்றனவே, இதுபற்றி என்ன சொல்கிறீர்கள்?
இது கவலையளிக்கும் விஷயம். புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த ஜவான் களில் யார் யார் என்ன சாதி என்று பத்திரிகை ஒன்று பட்டியலிட்டது மிகுந்த மனவருத்தம் அளித்தது உண்மையில் நமது ராணுவத்தினர் மத்தியில் ஜாதி மதப் பிரச்சினை என்ற ஒன்றே கிடையாது. இதெல்லாம் எவ்வளவு அபாயகரமான விஷயம் என்பதை ஊடகங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று மட்டும் சொல்வேன்.