விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருப்பூர் மாநகரில் புஷ்பா சந்திப்பு அவிநாசி ரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் இந்து முன்னணி அமைப்பின் கொடிகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த சூழலில், அவிநாசி ரோடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த இந்து முன்னணி கொடிகள் இரவோடு இரவாக அகற்றப்பட்டிருந்தன. விநாயகர் சதுர்த்தி அன்று காலையில் இதனை பார்த்த இந்து முன்னணி பிரமுகர்கள் அதிர்ச்சியடைந்தனர். திருப்பூர் புஷ்பா சந்திப்பு பகுதியில் அவர்கள் திரண்டனர். இந்து முன்னணி கொடிகளை அகற்றியதற்கு கண்டனம் தெரிவித்தும், மீண்டும் அந்தப் பகுதியில் கொடிகளை வைக்க கோரியும் இந்து முன்னணி நகர தலைவர்செல்வராஜ், நகர செயலாளர் காலேஜ் ரோட்டை சேர்ந்த மணிகண்டன் ஆகிய இருவரும் திருப்பூர் புஷ்பா மேம்பாலம் அருகே உள்ள சுமார் 70 அடி உள்ள தனியார் விளம்பர கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து மீண்டும் அந்த பகுதியில் இந்து முன்னணி கட்சி கொடிகளை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இருவரும் கீழே இறங்கி வந்தனர்.