டில்லியில் இருந்து, தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் காபூலுக்கு சென்ற பயணியர் விமானத்தை, பாகிஸ்தான் போர் விமானங்கள் நடுவானில் வழிமறித்த சம்பவம் நடந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள பயங்கரவாத முகாம்களை, நம் விமானப் படை, இந்தாண்டு துவக்கத்தில் தாக்குதல் நடத்தி அழித்தது. அதைத் தொடர்ந்து, பாக்., போர் விமானங்கள் நம் எல்லைக்குள் நுழைய முயன்றன. அதை, நம் விமானப் படை முறியடித்தது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தன் வான் எல்லையை பயன்படுத்த, பாக்., தடை விதித்திருந்தது; பின், அது விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில், டில்லியில் இருந்து, ஆப்கானிஸ்தானின் காபூலுக்குச் சென்ற, ‘ஸ்பைஸ் ஜெட்’ தனியார் விமான நிறுவனத்தின் பயணியர் விமானத்தை, பாக்., விமானப் படை நடுவானில் வழிமறித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, விமான போக்குவரத்து துறை உயரதிகாரிகள், கடந்த மாதம், 23ல் டில்லி – காபூல் செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானத்தை, தன் வான் எல்லையில், பாக்., விமானப் படை வழிமறித்து தடுத்து நிறுத்தியது; மேலும், உயரத்தை குறைத்துக் கொள்ளும்படி கூறியது. அந்த பயணியர் விமான விமானியுடன், பாக்., விமானப் படை வீரர்கள் பேசினர். அப்போது, ‘இது பயணியர் விமானம்’ என, ஸ்பைஸ் ஜெட் விமானி கூறினார். அதையடுத்து, தன் வான் எல்லை வரை, அந்த விமானத்துக்கு பாதுகாப்பாக, பாக்., விமானப் படை விமானங்கள் சென்றன.
ஒவ்வொரு விமான நிறுவனத்துக்கும், ஒரு குறியீடு உள்ளது. எஸ்.ஜி., ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் குறியீடு. விமானம் பறப்பது குறித்து தகவல் பரிமாறிக் கொள்ளும்போது, அதை, ஐ.ஏ., என தவறுதலாக, பாக்., விமானப் படை கட்டுப்பாடு அறை அதிகாரிகள் புரிந்து கொண்டுள்ளனர். அது, விமானப் படை விமானமாக இருக்கலாம் என எச்சரிக்கப்பட்டதால், பாக்., போர் விமானங்கள் வழிமறித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.