இந்திய விமானங்களை இயக்கும் திறன் எங்களிடம் இல்லை: மாலத்தீவு

‘மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் முழுமையாக வெளியேறி உள்ள நிலையில், இந்தியா வழங்கிய மூன்று விமானங்களை இயக்கும் திறன் கொண்ட விமானிகள் மாலத்தீவு ராணுவத்திடம் இல்லை’ என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் காசன் மவுமூன் தெரிவித்துள்ளார்.
நம் அண்டை நாடான மாலத்தீவின் அதிபராக முஹமது முய்சு உள்ளார். சீன ஆதரவாளரான அவர், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை தொடர்ந்து எடுத்து வருகிறார். மாலத்தீவு மக்களுக்கு உதவி செய்வதற்காக முகாமிட்டிருந்த இந்திய படைகளை வெளியேறும்படி அவர் கூறினார். அதன்படி, ஒரு விமான தளத்தில் உள்ள இந்திய வீரர்கள் வெளியேறினர்.

இந்நிலையில், மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் முழுமையாக வெளியேறி உள்ள நிலையில், இந்தியா வழங்கிய மூன்று விமானங்களை இயக்கும் திறன் கொண்ட விமானிகள் மாலத்தீவு ராணுவத்திடம் இல்லை என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் காசன் மவுமூன் ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் அவர் கூறியதாவது: சில வீரர்கள் இந்திய விமானத்தை இயக்கும் பயிற்சியைத் தொடங்கி இருந்தனர். இருப்பினும், அவர்கள் பயிற்சியில் பல்வேறு நிலைகளைக் கடக்க வேண்டி இருக்கிறது. பல்வேறு காரணங்களால் நமது வீரர்களால் அதை முடிக்க முடியவில்லை. இதனால் இந்திய விமானங்களை இயக்கும் லைசென்ஸ் மாலத்தீவு ராணுவத்தில் யாருக்கும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.