இந்த பிரச்சினைகள் தொடர்பாக இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.
இந்தநிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அவர் வாஷிங்டன் நகரில் உள்ள சர்வதேச நிதியத்தின் (ஐ.எம்.எப்.) தலைமையகத்தில், அமெரிக்க கருவூலத்துறை மந்திரி ஸ்டீவன் மனுசினை சந்தித்து பேசினார். இப்போது இரு தரப்பு வர்த்தக பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் பேசுகையில், “உள்ளபடியே சொல்வதானால், இரு தரப்பு வர்த்தக பிரச்சினை தொடர்பான பேச்சு வார்த்தை பற்றி நான் கருவூலத்துறை மந்திரி ஸ்டீவன் மனுசினிடம் குறிப்பிட்டேன். இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக வர்த்தக மந்திரியும், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைத்தீசரும் பணியாற்றி வருகிறார்கள். இரு தரப்பு வர்த்தக பேச்சுவார்த்தையானது முழு வேகத்தில் செல்கிறது. விரைவில் ஒப்பந்தம் எட்டப்படும் என்று நம்புகிறேன்” என குறிப்பிட்டார்.
இந்திய காப்பீட்டு துறை பற்றிய கேள்விக்கு பதில் அளித்து நிர்மலா சீதாராமன் குறிப்பிடும்போது, “ இன்று பெரும்பான்மையான தனியார் காப்பீடுகளும், குறிப்பிட்ட வருமானத்துக்கு கீழே உள்ளவர்களுக்கு அரசின் ஆயுஷ்மான் பாரத் காப்பீடும் ஒரு அருமையான பெரிய பாதுகாப்பாக அமைந்துள்ளது. காப்பீட்டு திட்டங்களுக்காக இப்போது நிறைய தனியார் துறையின் விருப்ப தேர்வுகளும் உள்ளன. இருப்பினும் இந்த குறிப்பிட்ட விஷயம், பேச்சுவார்த்தையில் இடம் பெற்றிருக்கிறதா என்பது குறித்து எனக்கு தகவல் இல்லை” என்று குறிப்பிட்டார்.
நிர்மலா சீதாராமன், அமெரிக்க கருவூலத்துறை மந்திரி ஸ்டீவன் மனுசினை சந்தித்து பேசியது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், நிர்மலா சீதாராமன், ஸ்டீவன் மனுசின் இடையேயான பேச்சு வார்த்தை பலன் அளிக்கத்தக்கவிதத்தில் இருந்ததாகவும், இருவரும் டெல்லியில் நவம்பர் முதல் வாரத்தில் சந்தித்து பேச உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.