அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் 2 நாள் பயணமாக நேற்று தனது குடும்பத்துடன் இந்தியாவுக்கு வந்தார். குஜராத் மாநிலம் ஆமதாபாத்துக்கு வந்து சேர்ந்த அவரை விமான நிலையத்தில் பிரதமர் மோடி வரவேற்றார்.
பின்னர், புதிதாக கட்டப்பட்ட சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நடைபெற்ற ‘நமஸ்தே டிரம்ப்’ என்ற நிகழ்ச்சியில், மோடியுடன் டிரம்ப் பங்கேற்றார்.
இங்கு வந்திருப்பதற்கு மிகவும் பெருமைப்படுகிறேன். இந்தியாவின் பன்முகத்தன்மை, துடிப்பான ஜனநாயகம், ஒற்றுமை ஆகியவை உலகத்துக்கே உந்துசக்தியாக திகழ்கின்றன. தனிநபர் சுதந்திரத்தை மதித்தல், சட்டத்தின் ஆட்சி, ஒவ்வொரு மனிதனின் கண்ணியத்தை காத்தல், அருகருகே இருந்து இணக்கமாக வழிபடுதல் போன்ற பாரம்பரியங்களை இந்தியா கொண்டுள்ளது.
‘பாலிவுட்’ என அழைக்கப்படும் இந்திய சினிமா உலகில், ஆண்டுக்கு 2 ஆயிரம் படங்கள் தயாரிக்கப்படுகின்றன. தில்வாலே துல்கானியா லே ஜாயேங்கே, ஷோலே போன்ற படங்களில் பாங்க்ரா, இசை, நடனம், காதல் போன்ற காட்சிகளை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்களாக சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோர் திகழ்கின்றனர்.
இந்தியாவும், அமெரிக்காவும் இயற்கையான கூட்டாளிகள். இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது, மதிக்கிறது. இந்தியாவின் உண்மையான, விசுவாசமான நண்பனாக அமெரிக்கா இருக்கும்.
பிரதமர் மோடி, ஒரு அபூர்வமான தலைவர். அவர் ஒரு டீ விற்பவராக வாழ்க்கையை தொடங்கினார். இந்தியாவுக்காக அல்லும், பகலும் உழைக்கிறார். ஒரு இந்தியன், தனது கடின உழைப்பாலும், அர்ப்பணிப்பு உணர்வாலும் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு வாழும் நிரூபணமாக அவர் திகழ்கிறார். இந்திய மக்களின் பாதுகாவலராக திகழ்கிறார்.
மாபெரும் நாடான இந்தியாவின் அபரிமிதமான வெற்றிகரமான தலைவராக இருக்கிறார். பூமிப்பந்தில் எங்குமே நடந்திராத மாபெரும் ஜனநாயக தேர்தலில், வேறு யாருமே பெறாத அமோக வெற்றியை பெற்றவர்.
பேச்சுவார்த்தை நடத்தும்போது, அவர் கடுமையாக நடந்து கொள்வார். இங்கு அளிக்கப்பட்ட விருந்தோம்பலையும், அபரிமிதமான வரவேற்பையும் எப்போதும் மறக்க மாட்டோம். எங்கள் இதயங்களில் இந்தியாவுக்கு எப்போதும் சிறப்பான இடம் இருக்கும்.
உலகின் மாபெரும் பொருளாதார வல்லரசான இந்தியா, தனது குடிமக்களுக்கு வளமான வாழ்க்கை அளிக்கும் வல்லமை கொண்டது. இன்னும் 10 ஆண்டுகளில், இந்தியா வறுமையை ஒழிக்கும். அதனால், நடுத்தர மக்களை பெருமளவு கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும்.
இந்தியாவுடன் பாதுகாப்பு உறவு வளர்ந்து வருகிறது. இந்தியாவுக்கு எம்எச்-60ஆர் ரகத்தை சேர்ந்த நவீன வசதிகள் கொண்ட 24 ஹெலிகாப்டர்களை அமெரிக்கா வினியோகம் செய்ய உள்ளது. ரூ.21 ஆயிரத்து 600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தம், டெல்லியில் 25-ந் தேதி (இன்று) கையெழுத்தாகிறது.
இந்த கிரகத்திலேயே மிகச்சிறப்பான ஆயுத தளவாடங் களை இந்தியாவுக்கு அளிக்க விரும்புகிறோம்.
இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தகம் 40 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்தியாவுடன் ஒரு அற்புதமான வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு அமெரிக்கா தயாராகி வருகிறது.
பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் இந்தியாவும், அமெரிக்காவும் உறுதியாக உள்ளன. பயங்கரவாத குழுக்களை ஒழிப்பதற்குத்தான், பாகிஸ்தானுடன் அமெரிக்கா நட்புறவு கொண்டுள்ளது. பாகிஸ்தானுடனான உறவு மிக நன்றாக உள்ளது.
ரத்த வெறி பிடித்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் மீது அமெரிக்க ராணுவத்தின் முழு பலத்தையும் கட்டவிழ்த்து விட்டுள்ளோம். அதனால், ஐ.எஸ். இயக்கத்தின் ராஜ்ஜியம், 100 சதவீதம் அழிக்கப்பட்டு விட்டது. அல் பாக்தாதி இறந்து விட்டான் என்று டிரம்ப் பேசினார்.