கூகுள் நிறுவனம், அதன் பிக்ஸல் சீரீஸ் ஸ்மார்ட்போன்களை, இந்தியாவில் தயாரிக்க இருப்பதாகவும்; அவை அடுத்த ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என்றும், கூகுள் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ரிக் ஆஸ்டர்லோ தெரிவித்துஉள்ளார். ‘கூகுள் பார் இந்தியா’ என்ற நிகழ்ச்சி டில்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், கூகுள் தேடுபொறி மேம்பாடு, செயற்கை நுண்ணறிவு சார்ந்த கருவிகள் உள்ளிட்ட பல புதிய அம்சங்கள் அறிமுகம் செய்ய உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்தது. மேலும், கூகுளுக்கு சொந்தமான யு-டியூப், இந்தியாவில் ஆதாரங்களுடன் கூடிய நம்பகமான செய்திகளை வழங்க ‘வாட்ச் பேஜ்’ என்ற வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், இந்த பக்கமானது, நம்பகமான செய்தி நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட வீடியோக்களை பரிந்துரைக்கும் என்றும் தெரிவித்தது.
மேலும் முக்கியமான ஓர் அறிவிப்பையும் வெளியிட்டது. இந்தியாவில் ‘பிக்ஸல் 8’ ஸ்மார்ட்போன்களை தயாரிக்க இருப்பதாகவும் அறிவித்தது. இந்தியாவில் பிக்ஸல் போன்களை தயாரிக்க, சர்வதேச ஒப்பந்த தயாரிப்பாளர்களுடன் ஒப்பந்தம் செய்ய இருப்பதாகவும்; வரும் 2024ம் ஆண்டு முதல், இவை விற்பனைக்கு வர இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.