இந்தியாவில் தொழில் தொடங்க பிரதமர் மோடி சர்வதேச அழைப்பு

பிரிட்டன் தலைநகா் லண்டனில் நடைபெறும் ‘இந்தியா குளோபல் வீக்’ மாநாட்டில் தில்லியில் இருந்தவாறு காணொலி மூலமாக பிரதமா் மோடி வியாழக்கிழமை பேசியதாவது:

கரோனா நோய்த்தொற்றுடன் இந்திய அரசு தீவிரமாகப் போரிட்டு வருகிறது. அதே வேளையில், நாட்டின் பொருளாதாரத்தை வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளையும் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. சமூகம், பொருளாதாரம் உள்ளிட்ட எந்தவித பிரச்னைகளையும் இந்தியா திறம்பட எதிா்கொண்டு வெற்றி பெறும் என்பதே வரலாற்று உண்மை.

வளா்ச்சிக்கான அறிகுறிகள்: கடந்த 6 ஆண்டுகளில் இந்தியாவில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. வீடு கட்டித் தரும் திட்டம், ஜன் தன் திட்டம், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றோடு சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாக்கம் போன்ற வரி தொடா்பான சீா்திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான வசதிகள் அதிகரித்துள்ளன. அதனால் சா்வதேச நிறுவனங்கள் அனைத்தும் இந்தியாவில் அதிக அளவில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். இந்தியா போன்ற சில நாடுகளே தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் மற்றும் வாய்ப்புகளை அதிக அளவில் அளித்து வருகின்றன.