இந்தியா, வங்கதேச எல்லை 4,000 கி.மீ. நீளம் கொண்டதாகும். இதில் மேற்குவங்கம், அசாம் மாநிலங்களில் இருந்து நாளொன்றுக்கு சுமார் 3000க்கும் மேற்பட்ட மாடுகள் வங்கதேசத்துக்கு கடத்தப்படுகின்றன. அடுத்த மாதம் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் மாடு கடத்தல் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன.
பொதுவாக மேற்குவங்கம், அசாமில் இருந்து கங்கை, பிரம்மபுத்திரா நதிகளில் படகுகள் மூலம் மாடுகள் கடத்திச் செல்லப்படுவது வழக்கம். இந்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் ரோந்து, கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தியிருப்பதால் கடத்தல்காரர்கள் புதிய உத்தியை பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்.
தற்போது பிரம்மபுத்திரா, கங்கையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தை கடத்தல்காரர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இரண்டு வாழை மரங்களுக்கு நடுவில் மாடுகளைப் பிணைத்துக் கட்டி ஆற்றில் தள்ளி விடுகின்றனர். வாழை மரத்துடன் சேர்ந்து மாடுகளும் ஆற்றில் மிதக்கின்றன. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் மாடுகளை வங்கதேச கரைகளில் காத்திருக்கும் கடத்தல்காரர்கள் மீட்டு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.
மேற்குவங்கத்தின் மால்டா, முர்ஷிதாபாத், நாடியா ஆகிய பகுதிகளில் கங்கை மற்றும் அதன் துணை நதியான பத்மாவில் இருந்து கடந்த சில நாட்களில் மட்டும் 261 மாடுகள் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து பிஎஸ்எப் படையின் டிஐஜி குலேரியா கூறியதாவது
இந்தியா, வங்கதேசத்துக்கு இடையே பிரம்மபுத்திரா, கங்கை மற்றும் அதன் துணை நதிகள் உள்ளன. அந்த ஆற்றுப் படுகைகளில் வேலி அமைப்பது கடினம். இதை பயன்படுத்தி பெரிய படகுகளில் மாடுகளைக் கடத்தி வருகின்றனர். இந்த கடத்தலை கணிசமாக தடுத்திருக்கிறோம். கோடை காலத்தில் நதிகள் வறண்டிருக்கும்போது தரை வழியாக மாடுகள் அதிகமாக கடத்தப்படுகின்றன. இதையும் தடுத்து வருகிறோம். இந்த முறை மழைக்காலத்தில் ஆற்று வெள்ளத்தைப் பயன்படுத்தி மாடுகளை கடத்துகின்றனர். வாழை மரங்களில் மாடுகளைக் கட்டி இரவு நேரங்களில் ஆற்றில் தள்ளி விடுகின்றனர். அந்த மாடுகள் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு வங்கதேசத்தில் கரை ஒதுங்குகின்றன. இதை தடுக்க நதிகளில் நைலான் தடுப்புகளை அமைத்துள்ளோம்.
இந்த ஆண்டு இதுவரை 16,350 மாடுகளை மீட்டுள்ளோம். வங்கதேசத்தை சேர்ந்த 50 பேர், மேற்குவங்கத்தை சேர்ந்த 70 பேரை கைது செய்துள்ளோம். மாடுகள் கடத்தலைத் தடுக்க வங்கதேச எல்லை பாதுகாப்புப் படையின் உதவியைக் கோரியுள்ளோம்.