இந்தியாவின் முதல் தனியார் ரயில் லக்னோ – டெல்லி, இடையே இன்று இயக்கப்படுகிறது.
இந்தியாவில் பயணிகள் ரயில் சேவை தனியார் மயமாக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. அந்த வகையில் முதல் தனியார் ரயிலாக டெல்லி, லக்னோ இடையே தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது.
இந்த ரயிலை உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் லக்னோவில் இந்த ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். ரயில்வேயின் ஒரு அங்கமான ஐஆர்சிடிசி இந்த ரயிலை இயக்குகிறது.
இந்த ரயில் தாமதமாக வந்தால், அதில் பயணம் செய்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும். அதாவது, ஒரு மணி நேரம் தாமதமாக வந்தால், 100 ரூபாயும், 2 மணி நேரம் தாமதமானால் 250 ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும்.
இந்த ரயிலில் பயணம் செய்யும் ஒவ்வொருவருக்கும் 25,00,000 ரூபாய் மதிப்பிலான இலவச பயண காப்பீடு வழங்கப்படும். இந்த ரயிலில் பயணம் செய்யும் போது, ஒருவரில் வீட்டில் திருட்டு நடந்தால், அதற்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கும் திட்டமும் இந்த பயண காப்பீட்டில் இணைக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் உடமைகளை வீட்டில் இருந்து ரயில் வரையும், பயணத்தை முடித்தபின் ரயிலில் இருந்து வீடு வரையிலும், கொண்டு சேர்க்கும் பணியையும் ஐஆர்சிடிசி செய்ய உள்ளது. இதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்.
ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு கூடங்களில் தேஜஸ் ரயிலுக்கான டிக்கெட்டுகள் கிடைக்காது. IRCTC இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். இந்த ரயிலில் பயணம் செய்ய தட்கல் அல்லது பிரிமியம் தட்கல் டிக்கெட்டுகள் கிடையாது. ரயில் முன்பதிவை ரத்து செய்யும் பட்சத்தில், அதற்கு பிடித்தம் செய்யப்படும் தொகை, மற்ற ரயில்களை விட மிக குறைவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானங்களில் வழங்கப்படுவதற்கு இணையான உணவு இந்த ரயிலிலும் வழங்கப்படும். இலவசமாக டி, காபி வழங்கும் மெஷின்களும் இந்த ரயிலில் வைக்கப்பட்டிருக்கும். வாரத்தின் செவ்வாய்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் இயக்கப்படும் இந்த ரயிலில் மொத்தமாக 758 பேர் பயணம் செய்ய முடியும்.
இந்த தேஜஸ் ரயிலில் லக்னவில் இருந்து டெல்லி வரை பயணிக்க AC CHAIR CARன் கட்டணம் 1,125 ரூபாய் என்றும், executive chair carன் கட்டணம் 2,310 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.