இது ஒருமை நிறைந்த நாடு

கீதா ஜெயந்தியை முன்னிட்டு நவம்பர் 28 அன்று பிரதமர் நரேந்திர மோடி உடுப்பியில் நடந்த பெருந்திரள் (ஒரு லட்சம் பேர்) பகவத் கீதை முற்றோதல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில், குஜராத் துவாரகையில் ருக்மணி வழிபட்ட கிருஷ்ணன் தான் கர்நாடகாவில் உடுப்பியில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார் என்று குறிப்பிட்டார்.

அத்துடன் சித்திரை மாதத்தில் குஜராத் போர்பந்தர் மாவட்டத்தில் ‘மாதவ்பூர் மேளா’ என்ற பெயரில் நடக்கும் ருக்மணி கிருஷ்ணன் திருக்கல்யாண உற்சவத்திற்கு, ருக்மணியின் தாய்வீடான அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்து மக்கள் ‘பெண் வீட்டார்’ சீதனம் சகிதம் பெரும் திரளாக வந்து கலந்து கொண்டு ஆனந்தம் அடைவார்கள்; வரும் ஆண்டிலாவது அந்த திருவிழாவிற்கு கர்நாடக மக்கள் சென்று வர வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார்.

தேசத்தின் பிரதமர் இவ்வளவு சிரத்தையுடன் பண்டிகைகள் பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்வது ஏன்? கிருஷ்ண பக்தி (பாரத கலாச்சாரம்) அருணாச்சல பிரதேசத்தையும், குஜராத்தையும் தொன்றுதொட்டு இணைத்து வைத்திருப்பதல்தான். வடகிழக்கை சேர்ந்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூட ஒரு முறை இந்த கலாச்சார ஒருமைப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டிப் பேசியிருக்கிறார்.

சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் எம்.எஸ்.சாந்தா, பத்மஸ்ரீ வ. சுப்பையா பிள்ளை அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்த்தி, அது நூலாக (‘கன்னடத்தில் காரைக்கால் அம்மையார்’) வெளிவந்தது. அந்த நூலில் இவர் காரைக்கால் அம்மையாரின் வாழ்வும், பணியும், பெருமையும் தமிழகத்தைத் தாண்டி, கர்நாடகத்தில் கவிஞரால் பாராட்டப் பெற்ற பாங்கினை நன்கு விளக்கியுள்ளார்.

63 நாயன்மார்களைப் பாடிய வீர சைவ சமயத்தைச் சார்ந்த கர்நாடகக் கவிஞர்கள் காரைக்கால் அம்மையாரைப் பற்றிக் குறிப்பிடும் கலை நிகழ்ச்சி இந்நூலில் அழகுற வர்ணிக்கப்பட்டது. ஸ்ரீ பசவேஸ்வரர் வாழ்ந்த காலத்தில் ஹரிஹரன் என்ற சிவபக்தர் (பொது யுகம் 12ஆம் நூற்றாண்டில்) அறுபத்துமூவரான நாயன்மார் வரலாறு திரட்டுவதற்காக தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்ததை தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர் அறிஞர் மு. அருணாசலம் பதிவு செய்திருக்கிறார்.

சிவ பக்தி வடிவில் கர்நாடகத்தையும், தமிழகத்தையும் எத்தனையோ நூற்றாண்டுகளாக ஹிந்து கலாச்சாரம் நல்லுறவு பேண செய்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு, அருணாச்சலப் பிரதேசம் மட்டுமல்லாமல் பாரதத்தின் ஒவ்வொரு மாநிலத்தையும் மற்ற மாநிலம் ஒன்றோடு, அல்லது முழு பாரதத்துடன், பக்தி, கலை அடங்கலான ஹிந்து கலாச்சாரம் பாலமாக இருந்து தொன்மையான தேசிய ஒருமைப்பாட்டு உணர்வுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து வருவது, இன்றைய தமிழ்ச் சூழலில் பேசுபொருள் ஆவது மிகவும் அவசியம்.