இதற்குமுன் இல்லாத அளவில் பாஜக மீது நம்பிக்கை அதிகரிப்பு: ம.பி. தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல்

இதற்கு முன் இல்லாத அளவில் மக்களிடையே பாஜக மீது நம்பிக்கையும், அன்பும் அதிகரித்துள்ளது என மத்திய பிரதேசம் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசினார்.

மத்திய பிரதேசத்தில் நாளைமறுநாள் (நவ.17-ல்) சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் மத்திய பிரதேசமாநிலத்தின் பெதுல் மாவட்டத்தில் தனது இறுதிகட்ட பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: மக்களிடையே பாஜக மீதான நம்பிக்கையும், அன்பும் இதற்கு முன் இல்லாத அளவில் அதிகரித்துள்ளதை நான் பார்க்கிறேன்.

தோல்வியை ஒப்புக்கொண்ட காங். தேர்தலை முன்னிட்டு தனது தோல்வியை காங்கிரஸ் ஒப்புக் கொண்டுள்ளது. மோடியின் வாக்குறுதிக்கு முன், தனது பொய் வாக்குறுதிகள் எடுபடாது என காங்கிரஸ் கட்சிக்கு தெரியும். தேர்தல் தேதி நெருங்குவதால், காங்கிரஸின் பொய்கள் எல்லாம் வெளிச்சத்துக்கு வருகின்றன. தோல்வியை ஒப்புக் கொண்டகாங்கிரஸ், தற்போது அதிர்ஷ்டத்தை நம்பியிருக்கிறது.

காங்கிரஸ் தலைவர்கள் எல்லாம் வீட்டில் அமர்ந்துள்ளனர். வெளியே செல்லக்கூட அவர்களுக்கு விருப்பம் இல்லை. மக்களிடம் என்ன சொல்வது என்பது காங்கிரஸ் தலைவர்களுக்கு தெரியவில்லை. நரேந்திர மோடியின் வாக்குறுதி களுக்கு முன்பு, தங்களது பொய் வாக்குறுதிகள் நிற்காது என்பதை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் செய்த ஊழலையும், கொள்ளையையும், தடுப்பதற்காக இந்த தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் ஆட்சி எங்கு வருகிறதோ, அங்கெல்லாம் அழிவுதான் என்பதை நீங்கள் அறிவீர்கள். செல்போன் உற்பத்தியில், உலகளவில் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.