இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல்

அந்த குடும்பத்தில் ஐந்து சகோதரர்களும் 1970 முதல் சங்க கார்யகர்த்தர்கள். அவரின் குடும்பமே சங்க குடும்பம். 25.6.1975 அன்று நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டவுடன் சங்கம் தடைசெய்யப்பட்டது. சங்க ஷாகாக்கள் நடைபெறவில்லை. ராஜ்குமாரின்ஜியின் மூத்த சகோதரர் சிவக்குமார் ஜி நகர் கார்யவாஹ்  வா இருந்தார். சகோதரர்கள் அனைவரும் வெவ்வேறு ஷாகாக்களில் முக்கிய சிக்ஷக்காக இருந்தனர். தலைமறைவு வாழ்க்கை மூலம் நெருக்கடி நிலை எதிர்ப்பு பணிகளை செய்து வந்தோம். பத்திரிகைகளில் மறைக்கப்பட்ட செய்திகளை உடனுக்குடன் செய்தியாக்கி, அந்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்து மக்களிடையே பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்த காலம் அது.

அதில் ராஜ்குமார் சிறுவயதிலேயே மிகவும் துணிச்சலானவர். பள்ளிப்பருவத்திலேயே அவரது கை உடைப்பட்டு சரிசெய்யப்பட்டது. மீண்டும் பள்ளியில் ஒரு விபத்தில் தாடை உடைந்து பின்னர் சரிசெய்யப்பட்டது. பின்னர் ஒரு ஆட்டோ விபத்தில் இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஆயினும் எதற்கும் பயப்படுவதில்லை. அவருக்கு இடப்பட்ட பணி துண்டு பிரசுரங்களை பொது மக்களிடம் விநியோகிப்பது. அவரது சைக்கிளில் உள்ள ஒரு பையில் துண்டு பிரசுரங்களும் இன்னொறு பையில் இரண்டு மூன்று வெவ்வேறு நிற சட்டைகளும் தயாராக இருக்கும். ஒரு பகுதியில் விரைவாக துண்டு பிரசுரங்களை வினியோகித்து விட்டு உடனே அந்த இடத்தை விட்டு கிளம்பி வேறு நிற சட்டையை மாற்றிக்கொண்டு வேறு ஒரு பகுதியில் துண்டு பிரசுரங்களை வினியோகிப்பது வழக்கம். இப்படி மாறி மாறி உடை மாற்றி துண்டு பிரசுரங்களை கொடுத்து வந்ததால், அவரை பிடிப்பது காவல்துறைக்கே சவாலாக இருந்தது.

ஒவ்வொரு நான் இரவிலும் வீட்டில் படுக்காமல், வீட்டின் புழக்கடை பக்கம் உள்ள கழிவறை தளத்தில் தூங்குவார். அவரது தாயார் அவரைப்பற்றி கவலைப்படுவதெல்லாம், “அவன் காவல்துறையில் பிடிபட்டு விட்டால், அவர்கள் அடிக்கும் அடியில் அவன் உடலெல்லாம் கழன்று விடுமே” என்றுதான். அந்த அளவிற்கு அவருக்கு முன்னதாக விபத்துகள் ஏற்பட்டிருந்தது. இவ்வளவு விழிப்பாக இருந்தும் ஒருநாள் அகரம் பகுதியில் காவலர்களிடம் அதிகாலையில் பிடிபட்டு விட்டார். காவலர் தனது சட்டையை பிடித்து இழுத்து சென்றபோது நிதானமாக அவரது சட்டை பொத்தான்களை கீழிருந்து ஒவ்வொன்றாக கழற்றி திடீரென்று மேல் பட்டனை கழற்றி சட்டையை உருவி விட்டு காவலரின் பிடியிலிருந்து தப்பி தூரத்திலுருந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு தப்பித்துவிட்டார். கடைசி வரையில் அகப்படவே இல்லை.

அவரது நெருங்கிய நண்பரும் லட்சலிங்கமும் சங்க ஸ்வயம்சேவக். அவர்கள் இருவரும் சேர்ந்து செய்த செயல்கள் ஏராளம். எமர்ஜென்சி காரணமாக சங்கம் தடைசெய்யப்பட்டு சங்க கார்யாலயம் சீல் வைக்கப்பட்டவுடன் கார்யாலயத்தி
லிருந்த முக்கியமான ஆவணங்களை மீட்க வேண்டியிருந்தது. அந்த பணியை அப்போதைய பிராந்த பிரச்சாரக் ஷண்முகநாதன் ஜி அவர்களுக்கு அளித்தார். ஒரு நாள் அதிகாலையில் பால்காரர்கள் போல் வேடமணிந்து இருவரும் கார்யாலய மதில் சுவரில் ஏறிகுதித்து முக்கிய ஆவணங்களை தூக்கிக்கொண்டு வெளியில் வரும்போது காவலர்களிடம் பிடிபட்டுவிட்டனர். இருவரையும் கம்பத்தில் கட்டி வைத்து அடிக்க ஆரம்பித்தனர். இருவரும் காசுக்கு ஆசைப்பட்டு தான் இந்த வேலை செய்தோம் என்றனர். “எங்களை அனுப்பியவர் உங்களை காசு, பணம், நகை கொண்டு வரச்சொல்லவில்லை வெறும் பேப்பர்கள் தான் எடுத்து வரச்சொல்கிறேன், அது தப்பில்லை என்று ஆசை வார்த்தை கூறினார்”. அதனால் தான் காசுக்காக ஆசைப்பட்டு பேப்பர் புஸ்தகங்கள் தானே என்று நினைத்து எடுத்து வந்தோம். மற்றபடி அவரைப்பற்றி வேறு ஒன்றும் தெரியாது என்று அதையே திருப்பி திருப்பி கூறினர்.

காவலர்கள் டீ சாப்பிட அருகில் ஒரு கடைக்கு சென்றார்கள். அப்போது ராஜ்குமார் கட்டியிருந்த கயிறை சாமர்த்தியமாக கழற்றி சைக்கிளில் கட்டி வைத்திருந்த அனைத்து ஆவணங்களுடன் தப்பிவிட்டார். லட்சலிங்கம் அவர்களை அடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுவிட்டனர். ராஜ்குமார் இந்த தகவலை தெரிவித்தவுடன் அண்ணாமலை ஜி காவல் நிலையத்திற்கு சென்று அவன் என்னிடம் வேலை செய்கிறான். யாரோ காசு கொடுக்கிறார்கள் என்று விளையாட்டாக செய்துவிட்டான். மற்றபடி அவனுக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறி அழைத்து வந்துவிட்டார்.

அவ்வளவு இக்கட்டான நிலையிலும் ஆவணங்கள் அனைத்தையும் பத்திரமாக எடுத்து வந்து பிரச்சாரக் ஷண்முகநாதன் ஜியிடம் கொடுத்து பணியை சிறப்பாக முடித்தனர்.

இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல் என்ற வள்ளுவனின் வாக்கினை நிரூபித்த ஆர்.எஸ்.எஸ். அன்பர்கள்.

நெருக்கடி நிலை பேராட்ட வீரர்கள்
குடும்ப சங்கம விழா புத்தகத்திலிருந்து