சிதம்பரம் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் கார்த்தியாயினியை ஆதரித்து, அரியலுார் மாவட்டம், கொல்லாபுரத்தில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:
தமிழகத்தில் தமிழ் பண்பாடு மற்றும் கலாசாரம், அதன் தொன்மை ஆகியவற்றுக்கு பா.ஜ., மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஆனால், தி.மு.க., – காங்.,தமிழகத்தின் கலாசாரத்தை அழிக்க துடிக்கின்றன. இந்தியாவில் ஊழல் இல்லாத ஆட்சியை மோடி நடத்தி வருகிறார். ஆனால், ‘இண்டியா’ கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுமே வாரிசு அரசியலைமுன்னிறுத்தி உள்ளன. இக்கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளன.
பரூக் அப்துல்லா – காமன்வெல்த் கிரிக்கெட் ஊழல்; லாலு பிரசாத் – மாட்டுத் தீவன ஊழல்; அகிலேஷ் யாதவ் – லேப்டாப் ஊழல்; கெஜ்ரிவால் – மதுபான கொள்கை ஊழல்; தி.மு.க., கருணாநிதி குடும்பம் – வருமான வரி ஊழல் உள்ளிட்ட ஊழலில் சிக்கித் தவிக்கின்றன. காங்கிரஸ் கட்சியில்சோனியா, ராகுல், சிதம்பரம், கார்த்தி உள்ளிட்ட அனைவருமே தற்போது பெயில் வாங்கி வெளியில் உள்ளனர். இண்டியா கூட்டணி தலைவர்கள் ஒன்று ஜெயிலில் இருக்கின்றனர் அல்லது பெயிலில்இருக்கின்றனர்.
இங்குள்ள தி.மு.க., வுக்கு கொள்ளை அடிப்பது, கட்டப்பஞ்சாயத்து செய்வது தான் கொள்கை. இவர்களது ஊழலை ஒழிக்க பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வர, நீங்கள் தாமரை சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
மூன்றாவது முறையாக மோடி நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றால், பொருளாதார வளர்ச்சியில், நாடு மூன்றாவது இடத்திற்கு முன்னேறும். நிலக்கரி, கார், மொபைல் போன், எக்கு உற்பத்தியில் இந்தியா முன்னேறி வருகிறது. அதற்கு, பிரதமர் மோடி தான் காரணம். பத்தாண்டுகளில் செய்த திட்டங்களை சொல்லி, பா.ஜ., லோக்சபா தேர்தலில் பிரசாரம் செய்கிறது. ஆனால், ‘இண்டியா’ கூட்டணியினர், எதை சொல்லி ஓட்டு கேட்பர்? சனாதன தர்மத்தை இழிவுபடுத்தியவர்களுக்கு, தமிழக மக்கள் ஓட்டுப்போடக் கூடாது.
விருதுநகர் பா.ஜ., வேட்பாளர் ராதிகாவை ஆதரித்து, மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் நட்டா பேசியதாவது: புதிய பார்லிமென்டில் சபாநாயகர் இருக்கை அருகே தமிழின் பெருமையை பறைசாற்றும் செங்கோலை நிறுவி, நல்லாட்சியின் பெருமை செங்கோல் என வெளிப்படுத்தியவர் மோடி.
ஆனால், இதை ஆதரிக்க வேண்டிய காங்கிரஸ், தி.மு.க., தொடர்ந்து தமிழ் பண்பாட்டுக்கு எதிராக குரல் கொடுக்கின்றனர். கொரோனா காலகட்டத்தில் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் பொருளாதார சரிவு ஏற்பட்டது. இந்தியாவில் மட்டுமே பொருளாதார வளர்ச்சி இருந்தது. பிரதமர் மோடி தலைமையில் நம் நாடு பல துறைகளில் மகத்தான வளர்ச்சி பெற்றுள்ளது. எலக்ட்ரானிக்ஸ் பொருள் உற்பத்தியில் ஆறு மடங்கு வளர்ச்சியும், அதே துறையில் ஏற்றுமதி 70,000 கோடி அளவுக்கும் உள்ளது.
முன்பெல்லாம் நாம் வாங்கும் மொபைல் போனில், ‘மேட் இன் சீனா’ என்று இருக்கும். இன்று உலகம் முழுக்க ஏற்றுமதியாகும் மொபைல் போன், ‘மேட் இன் இந்தியா’ என உள்ளது. மருந்து உற்பத்தியில் 100 சதவீதத்தில் இருந்து 138 சதவீதம் உயர்ந்துள்ளோம். பெட்ரோ கெமிக்கல் துறையில், 106 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளோம்.
விளிம்பு நிலையில் உள்ள மகளிர், இளைஞர்கள், விவசாயிகள், பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், மீனவர் மேம்பாடு என, எல்லா தரப்பு மேம்பாட்டுக்கும் திட்டம் செயல்படுத்தி வெற்றி பெற்றுள்ளார் மோடி. பிரதமரின் உணவு வழங்கும் திட்டத்தில் 80 கோடி பேருக்கு மாதம் 5 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை, ஒரு கிலோ பருப்பு கொரோனா காலம் தொட்டு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 3.60 கோடி பேர், விருதுநகரில், 14 லட்சம் குடும்பங்கள் பயன் பெறுகின்றன.
விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை, 2,000 ரூபாய் நிதி, இந்தியாவில் 11 கோடி பேருக்கு வழங்குகிறோம். உஜ்வாலா காஸ் இணைப்பு திட்டத்தில் நாடு முழுதும் 10 கோடி பேருக்கு வழங்குகிறோம்.
ஜல்ஜீவன் குடிநீர் தரும் திட்டம் நாடு முழுதும் 11.4 கோடி வீடுகளுக்கும், தமிழகத்தில் 80 லட்சம் குடும்பங்களுக்கும் தருகிறோம். ஆயுஷ்மான் திட்டம் 55 கோடி பேருக்கு வழங்குகிறோம். தமிழகத்தில் மட்டும் 77 லட்சம் பேர் பயன் பெறுகின்றனர். இப்படி சர்வதேச அளவில் ஒரு சதவீத அளவுக்கு ஏழ்மையை குறைத்த ஒரு பிரதமராக மோடி உள்ளார். தமிழகம் எனும் போது சிறப்பு கவனம் அளித்து, அதிக நிதி கொடுக்கும் பிரதமராக மோடி உள்ளார். தமிழகத்திற்கு 11 ஸ்மார்ட் சிட்டி, ரயில்வேயில் ஏழு மடங்கு வளர்ச்சி தரும் அளவுக்கு பல திட்டம் தந்துள்ளார். சேலம் உட்பட பல பகுதிகளில் தொழிற்சாலை நகரங்களை கொண்டு வந்துள்ளார். சென்னை – பெங்களூரு ‘இண்டஸ்ட்ரியல் காரிடர்’ கொண்டு வந்துள்ளோம்.
சுகாதார துறையில் தமிழகத்திற்கு 11 மருத்துவ கல்லுாரிகளை கொடுத்துள்ளார். தமிழகத்தில் காங்கிரஸ், தி.மு.க., எல்லாமே லஞ்ச கட்சிகள். தி.மு.க., என்றாலே குடும்ப கட்சி. பணத்தை சுருட்டும் கட்சி. கட்டப்பஞ்சாயத்து செய்யும் கட்சி. இண்டியா கூட்டணியில் மற்ற கட்சிகளை எடுத்துக்கொண்டால், ஜம்மு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை குடும்ப கட்சிகளாக தான் உள்ளன.
அது கருணாநிதி குடும்பத்திற்கும் பொருந்தும். ராகுல், சோனியா, பிரியங்கா குடும்பம், மஹாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே, பீஹாரில் லாலு பிரசாத் யாதவ், உ.பி.,யில் சமாஜ் வாதி கட்சி எல்லாமே குடும்ப கட்சிகள் தான். இவர்களெல்லாம் சேர்ந்திருப்பது ஊழல் செய்வதற்காக, அவர்களை பாதுகாப்பதற்காகத் தான். ஆனால், நாம் அப்படியின்றி, யார் ஊழல் செய்தாலும் அவர்களை ஜெயிலில் போடுவோம். அப்படித்தான் கெஜ்ரிவாலை ஜெயிலில் போட்டுள்ளோம். பிரதமர் எப்போதும் ஊழலை ஏற்க மாட்டார். இவ்வாறு அவர் பேசினார்.