ராமர் கோயில் விவகாரம் தேவையற்றது என சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ் கூறியிருந்தார். இது தொடர்பாக உ.பி., மாநிலம் லக்கிம்பூர் கெரி பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: ராமர் கோயில் தேவையற்றது என்று ராம் கோபால் கூறுகிறார். ஒருவேளை எதிர்க்கட்சிகள் கட்சிகள் (இண்டியா கூட்டணி) ஆட்சிக்கு வந்தால், ராமர் கோயிலுக்கு பாபர் பூட்டு போடுவார்கள்.
ராமர் கோயில் விவகாரத்தில் 70 ஆண்டுகளாக காங்கிரஸ் முட்டுக்கட்டை போட்டது. நீங்கள் (மக்கள்) மோடியை இரண்டாவது முறையாக பிரதமராக்கியதும், ராம ஜென்மபூமி தொடர்பான சட்டப் பிரச்னையில் வெற்றி பெற்றது மட்டுமின்றி, ராமர் கோயில் கட்டப்பட்டு பிராண பிரதிஷ்டையும் நடத்தினார். எதிர்க்கட்சிகள் தங்கள் ஓட்டு வங்கிக்கு பயந்து அந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. ராமர் கோயிலுக்கு வெட்கப்படுபவர்களை உத்தரபிரதேசம் ஒருபோதும் ஆதரிக்காது.
இண்டியா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தால், அதன் பிரதமர் யார்? சரத் பவார், மம்தா பானர்ஜி, ஸ்டாலின், அகிலேஷ் அல்லது ராகுல் பிரதமர் ஆகிவிடுவார்களா? அந்த கூட்டணிக்கு ஒரு தலைவரும் இல்லை, கொள்கையும் இல்லை, உறுதியும் இல்லை. லோக்சபா தேர்தலின் முதல் மூன்று கட்டங்களுக்குப் பிறகு, பா.ஜ., 190 இடங்களைத் தாண்டிவிட்டது. 4வது கட்டத்தில், மோடியின் தலைமையில், நாங்கள் 400 இடங்களை நோக்கி வலுவாகச் செல்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.