பிரதமர் மோடி கடந்த மாதம் 4-ம் தேதி லட்சத்தீவு சென்றார். அப்போது அழகிய பிரிஸ்டைன் கடற்கரையில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த மோடி, சாகச சுற்றுலாவுக்கு ஏற்ற இடம் லட்சத்தீவு என குறிப்பிட்டிருந்தார். இதனால் மாலத்தீவு சுற்றுலா பாதிக்கப்படும் என கருதி மாலத்தீவு அமைச்சர் உட்பட சில தலைவர்கள் பிரதமர் மோடியை விமர்சித்திருந்தனர்.
மாலத்தீவின் புதிய அதிபர் முகமது முய்சு, சீனாவுக்கு ஆதரவாக செயல்படுகிறார். இது இந்தியா-மாலத்தீவு உறவில் விரிசலை ஏற்படுத்தியது. இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் வெளியுறவுத் துறைக்கு 2024-25-ம் ஆண்டில் ரூ.22,154 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இதில் அண்டை நாடுகளின் வளர்ச்சி திட்டங்களுக்கு இந்தியா நிதியுதவி அளித்து வருகிறது. மாலத்தீவுக்கு கடந்த நிதியாண்டில் ரூ.770 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இது 2024-25-ம் நிதியாண்டில் ரூ.600 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. மாலத்தீவை புறக்கணியுங்கள் என்ற ஹேஷ்டேக்-ஐ இந்திய பிரபலங்கள் மற்றும் பாலிவுட் நடிகர்கள் பரப்பியதால் சுற்றுலா வருவாயை நம்பியிருக்கும் மாலத்தீவுக்கு பாதிப்பு ஏற்பட்டது. தற்போது, வளர்ச்சி திட்டநிதியை இந்தியா குறைத்தது மாலத்தீவுக்கு மற்றொரு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை யில் பூடானுக்கு ரூ.2,068 கோடி, நேபாளத்துக்கு ரூ.700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது.