இங்கே முதல் ரசிகன் கடவுள்

வாருங்கள், சங்கிப்பலகையில் அமர்ந்து உரையாடுவோம். இலக்கியம் இங்கே ஆன்மிகச் செழுமை வாய்க்கப் பெற கடவுளே முதல் ரசிகனான சம்பவங்கள் ஒன்றிரண்டு அல்ல பலப் பல. செந்தமிழைச் செவிமடுத்து மயங்குபவர் மானிடர்கள் மட்டுமில்லை, “தமிழுக்கு நான் அடிமை” என்று ஆண்டவனே பல சமயம் மயங்கி நின்றதுண்டு. புலவர்களையும், பிறரையும் இறைவன் ஆட்கொள்ளும் விதமே அலாதி!

ராஜசேகரன் என்றொரு மன்னர் சேர நாட்டை ஆண்டு வந்தார். பின்னாட்களில் இவர் சேரமான் பெருமாள் நாயனாராக அறியப்பட்டவர். தீவிர சிவ பக்தர். தினமும் இவர் சிவ பூஜை செய்த பின், நடராஜரின் சிலம்பொலி கேட்கும். இவரும், தனது பூஜையில் எந்தக் குறையுமில்லை என உணர்ந்து கொள்வார். ஒரு நாள் பூஜை முடிந்தது; ஈசனின் சிலம்பொலி கேட்கவில்லை. தன் பூஜையில் ஏதோ குற்றம் எனக் கலங்கி, இனி தான் உயிர்வாழக் கூடாதென்று வாளை உருவிய நொடியில், ஈசனின் குரல் கேட்டது… “சுந்தரரின் பாடலில் மெய்மறந்துவிட்டேன் அது தான் தாமதம்”.

இதே சுந்தரர் தான் திருவெண்ணெய்நல்லூரில் சிவனை “பித்தா” என்று ஏச, அதையே முதல் அடியாய் எடுத்துத் தந்து பாடப் பணித்தான் சிவபெருமான். “பித்தா! பிறைசூடி பெருமானே” … பாடினார் அந்த வன்தொண்டர். சேரமான் பெருமாள் தன் பங்கிற்கு “பொன்வண்ணத்து அந்தாதி” எழுதி சிவனை மகிழ்வித்தார்.

மதுரையில் குமரகுருபரர் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழை அரங்கேற்றிய போது, சின்னஞ்சிறுமியாய் வந்த அன்னை மீனாட்சி, மன்னன் மடியில் அமர்ந்து ரசித்தாள். முத்துமாலையைப் பரிசளித்தாள். குமரகுருபரர் பிறவி ஊமை. ஓம் எனும் பிரணவ மந்திரத்தை இவர் நாவில் எழுதி இவரை கவி பாட வைத்தான் திருச்செந்தூர் முருகன். அங்கு தான் முருகன் பிள்ளைத்தமிழ் பாடினார். ஒரு சமயம் குமரகுருபரர் தில்லி சென்றபோது, ஓர் இரவில் அயல்மொழி கற்க வேண்டிய அவசியம். சகலகலாவல்லி மாலை பாட, சரஸ்வதி அருளால் அந்நிய மொழியைக் கற்றார்.

குமரகுருபரர் பாடல் கேட்க, மீனாட்சி குழந்தையாய் மாறியது போல், குருநமச்சிவாயரின் கொஞ்சு தமிழ்ப் பாடல் கேட்க விருத்தாம்பாள் வாலாம்பாளாக காட்சியளித்த இடம் விருத்தாசலம்..

அபிராமி பட்டர் அபிராமி அந்தாதி பாடப்பாட, அன்னை தனது தாடங்கத்தை வீசி அமாவாசையை பௌர்ணமியாக்கிய இடம் திருக்கடையூர்.

அரச கட்டளையால் நாட்டை விட்டு வெளியேறிய தமிழ்ப்புலவன் கணிகண்ணனுக்காக சொன்ன வண்ணம் செய்த பெருமாள் ஆலயத்தை விட்டு வெளியேறிய இடம் காஞ்சிபுரம்.
தேவராய ஸ்வாமிகள் கந்தர் சஷ்டி கவசம் எனும் மந்திர நூலை இயற்றியது சென்னிமலை முருகன் கோவிலில்.

பொழியுமே இதுபோல இன்னும்
தகவல் அருவி.