இங்கிலாந்து பிரதமராகும் வாய்ப்பு?

இங்கிலாந்தின் அடுத்த பிரதமராகும் போட்டியில் உள்ள லிஸ் ட்ரஸ் மற்றும் இந்திய வம்சவாளியினரான ரிஷி சுனக் ஆகியோருக்கு இடையேயான போட்டி தினம் தினம் கடுமையாகி வருகிறது. போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி வருகிறது. இதில் பிரதமராகும் வாய்ப்பு யாருக்கு உள்ளது என்ற கருத்துக் கணிப்புகளில், லிஸ் ட்ரஸ்ஸுக்கு இங்கிலாந்தின் பிரதமராகும் வாய்ப்பு 90 சதவீதம் இருப்பதாகவும் ரிஷி சுனக்குக்கு 10 சதவீதம் மட்டுமே வெற்றி வாய்ப்பு இருப்பதாக இருப்பதாகவும் அங்கிருந்து வரும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அரசியல் நிபுணரான மெத்யூ கூறுகையில், “ரிஷி நன்றாக பிரச்சாரம் செய்கிறார். ஆனால் லிஸ் ட்ரஸ் சிறப்பாக செயல்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்புகின்றனர்” என தெரிவித்தார். இதுகுறித்து ரிஷி சுனக் பேசுகையில், “கருத்துக்கணிப்புகள் நான் பின்தங்கி இருப்பதாக கூறுகின்றன. நான் சிறப்பாக செயல்படுவேன். ஒரு வாக்குறுதி அளிக்கிறேன். நான் ஒவ்வொரு ஓட்டுக்காகவும் போராடுவேன்” என நம்பிக்கையுடன் கூறினார். தேர்தல் இறுதி முடிவுகள் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது என்பதால் அதற்கு இன்னும் சில காலம் உள்ளது. அதற்குள் எதுவும் எப்படியும் மாறலாம் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.