உலக நாடுகள் தங்கத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வகையில் அண்மைக்கால தரவுகளின்படி, மார்ச் மாத இறுதியில் இந்திய ரிசர்வ் வங்கியிடம் 822.1 டன் தங்கம் இருந்தது. அதில் 413.8 டன்கள் வெளிநாடுகளில் உள்ளன. கடந்த நிதியாண்டில் வாங்கிய 27.5 டன்கள் சேர்த்து, சமீபத்திய ஆண்டுகளில் தங்கத்தை வாங்கிய மத்திய வங்கிகளில் ஆர்பிஐ.,ம் ஒன்று. தற்போது ஆர்பிஐ கைவசம் உள்ள தங்கத்தில் 308 டன்னிற்கு நிகராக, ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இங்கிலாந்து வங்கியில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ளது. அந்த வங்கியில் இருந்து 100 டன் தங்கத்தை நாட்டிலுள்ள தனது பெட்டகங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது. அந்த தங்கம், சிறப்பு விமானம் மூலம் மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கொண்டு வரப்பட்டு மும்பையின் மின்ட் சாலை மற்றும் நாக்பூரில் உள்ள ரிசர்வ் வங்கியின் பழைய அலுவலக கட்டடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் ரிசர்வ் வங்கியின் செலவில் சிலவற்றை சேமிக்க முடியும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.