ஒரு மாநிலத்தின் சட்டமன்றம் என்பது பாரத அரசியலமைப்பின் கீழ் இயங்கும் ஓர் அமைப்பு. அங்கே தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அளிக்கப்படும் அதே முக்கியத்துவம், தேசிய கீதத்திற்கும் அளிக்கப்பட வேண்டும் என்பது ஆளுநரின் நியாயமான கோரிக்கை.
கூட்டத்தின் தொடக்கத்திலேயே தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற அவரது கோரிக்கையை சபாநாயகர் நிராகரிப்பது, தேசப்பற்றை விட அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதைக் காட்டுகிறது. தேசிய கீதத்தை அவமதிக்கும் ஒரு சூழலில் அமர ஆளுநர் மறுத்தது அவரது தேசப்பற்றின் அடையாளம்.
அரசு தயாரித்துக் கொடுத்த உரையில், பல உண்மைக்கு மாறான தகவல்கள் இடம்பெற்றிருந்ததாக ஆளுநர் மாளிகை (லோக் பவன்) தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்றத்தில் ஆளுநர் பேச முற்பட்டபோது, அவரது மைக் அணைக்கப்பட்டுள்ளது. நாட்டின் உயரிய பதவியில் இருக்கும் ஒருவருக்கே இந்த நிலை என்றால், அது ஜனநாயகத்தின் கறுப்பு தினம். சபாநாயகர் நடுநிலையோடு செயல்படாமல், ஆளுநரை நோக்கி அரசியல் விமர்சனங்களை முன்வைத்தது, சட்டமன்ற மரபுகளுக்கு எதிரானது.

ஆயிரக்கணக்கான கோயில்கள் அறங்காவலர்கள் இன்றி சிதிலமடைந்து வருவது மற்றும் உள்ளாட்சித் தேர்தல்கள் முறையாக நடத்தப்படாதது போன்ற அடிப்படை ஜனநாயகக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டத் தவறிய அரசை, ஆளுநர் தனது வெளிநடப்பு மூலம் அம்பலப்படுத்தியுள்ளார்.
ஆளுநரின் வெளிநடப்பு என்பது தமிழக அரசின் நிர்வாகத் தோல்விகளுக்கும், தேசிய கீதப் புறக்கணிப்பிற்கும் எதிராக அவர் காட்டிய நேர்மையான எதிர்ப்பாகும். இது தனிநபர் மோதல் என எடுத்துக்கொள்ளக்கூடாது. இது அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைக் காப்பதற்கான போராட்டம் என எடுத்துக்கொள்ள வேண்டும்.
தமிழக அரசியல் வரலாற்றில் ‘ஜனநாயகம்’, ‘சுயாட்சி’ என்று பேசிக்கொண்டே, தங்களுக்குச் சாதகமற்ற சூழல் உருவாகும்போது, அரசியலமைப்பு நிறுவனங்களைச் சிதைப்பது திமுகவின் வாடிக்கையாகி விட்டது. அண்மைக்கால நிகழ்வுகள், இந்த அரசு தன் தவறுகளைத் திருத்திக் கொள்வதற்குப் பதிலாக, கேள்வி கேட்பவர்களை முடக்குவதிலேயே குறியாக இருக்கிறது திமுக அரசு.
ஒரு ஜனநாயக நாட்டின் கடைசி நம்பிக்கை நீதித்துறை. ஆனால், திமுக அரசுக்கு எதிராக அல்லது அவர்கள் அமைச்சர்களுக்கு எதிராகத் தீர்ப்புகள் வரும்போது, அந்தத் தீர்ப்பை சட்டப்படி எதிர்கொள்வதற்குப் பதிலாக, நீதிபதிகளின் நேர்மையைச் சந்தேகிக்கிறார்கள், தங்களுக்குப் பாதகமான தீர்ப்பு வரலாம் என்று தெரிந்தாலே, சம்பந்தப்பட்ட நீதிபதியை மாற்றச் சொல்லி, மனு அளிப்பது அல்லது கடிதம் எழுதுவது என்பதெல்லாம் நீதித்துறையை அச்சுறுத்தும் செயல். நீதிமன்றம் எங்களுக்குச் சாதகமாக இருந்தால், அது சமூக நீதி; எதிராக இருந்தால் அது சதி” என்கிற திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது.
ஆளுநர் என்பவர் மாநில அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் அரசியலமைப்பு ரீதியான அதிகாரம் கொண்டவர். போதைப்பொருள் புழக்கம், நிர்வாகச் சீர்கேடு, ஊழல் குறித்து ஆளுநர் கேள்வி எழுப்பும் போது, அதற்குப் பதிலளிக்கத் திராணி இல்லாத திமுக அரசு, “ஆளுநர் பதவி எதற்கு?” என்று முழக்கமிடுகிறது.
மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பாலமாக இருக்க வேண்டிய ஆளுநரை, ஒரு அரசியல் எதிரியாகப் பாவித்து, சட்டமன்றத்தில் அவரை அவமதிப்பது தமிழகத்தின் பண்பாட்டிற்கு எதிரானது. திமுக அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் எளிய குடிமகனோ, பத்திரிகையாளரோ அல்லது எதிர்க்கட்சியினரோ யாராக இருந்தாலும், அவர்கள் மீது உடனடியாக வழக்குத் தொடர்வதும், கைது செய்வதும் வாடிக்கையாகி விட்டது.
மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு என மக்கள் அவதிப்படும் போது, அதைப் பற்றி விவாதிக்க மறுக்கும் திமுக அரசு, மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப மொழிப் பிரச்சினையையோ அல்லது தேவையற்ற சர்ச்சைகளையோ கையில் எடுக்கிறது.
ஒரு மாநிலத்தின் ஆளுநர் தேசிய கீதத்திற்கு மரியாதை கேட்டால், அதையே ஒரு ‘திராவிட – ஆரிய’ போராகச் சித்திரிக்க முயல்வது, இவர்களின் அரசியல் காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது.
அரசியலமைப்புச் சட்டத்தின் பெயரால் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டவர்கள், அதே சட்டத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்களை மதிக்கத் தவறுவது, தமிழகத்தின் வளர்ச்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை மறந்து விட்டு, தங்களுக்கு ஒரு சட்டம், மற்றவர்களுக்கு ஒரு சட்டம் என அவர்களது சுய விருப்பத்திற்கு ஏற்ப செயல்படுகிறார்கள். மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தேவையான நிதியைப் பெறுவதையோ அல்லது திட்டங்களைச் செயல்படுத்துவதையோ விட, மத்திய அரசுடன் எப்போதும் ஒரு மோதல் போக்கைக் கடைப்பிடிப்பதையே திமுக விரும்புகிறது.

ஆளுநரை எதிர்ப்பதன் மூலம் தங்களை ‘மாநில உரிமைகளின் காவலர்களாக காட்டிக்கொள்ள முயல்கிறார்கள். ஆனால், உண்மையில் நிர்வாகத் தோல்விகளையும், தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றாததை மறைக்கவே, இந்த ‘ஆளுநர் எதிர்ப்பு’ என்கிற கேடயத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
ஜனநாயகம் பற்றிப் பேசும் திமுகவில், தகுதியுள்ள மற்ற தொண்டர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படாமல், வாரிசு அரசியலே கோலோச்சுகிறது. இதை யாராவது சுட்டிக்காட்டினால், “அவர் உழைப்பால் உயர்ந்தார்” என்று ஒரு போலியான விளக்கத்தைக் கொடுத்து மழுப்புகிறார்கள். கட்சியின் உட்கட்சி ஜனநாயகமே கேள்விக்குறியாக இருக்கும் போது, இவர்கள் நாட்டின் ஜனநாயகம் பற்றிப் பேசுவது வேடிக்கையாக உள்ளது.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஊடகங்கள் திமுகவின் நேரடி அல்லது மறைமுகக் கட்டுப்பாட்டில் உள்ளன. அரசின் தவறுகளைப் பெருமளவு மறைத்து, ஆளுநருக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் எதிராக ஒருதலைப்பட்சமான செய்திகளை வெளியிடுமாறு ஊடகங்கள் நிர்பந்திக்கப்படுகின்றன. இதையும் மீறிச் செயல்படும் யூடியூப் சேனல்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மீது குண்டர் சட்டம் பாய்கிறது.
தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது அதைச் சரி செய்துகொள்வதே ஒரு நல்ல அரசுக்கு அழகு. அதை விடுத்து, கேள்வி கேட்பவர்களை மிரட்டுவதும், நீதிபதிகளையும், ஆளுநரையும் தரக்குறைவாக விமர்சிப்பதும், ஜனநாயகப் படுகொலையாகும். தமிழக மக்கள் இவர்களின் இந்த ‘சர்வாதிகாரப் போக்கை’ உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எதிர்வரும் தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பு இவர்களுக்கு ஒரு பாடமாக அமையும்.