கேரளாவில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மூத்த தலைவரும், சமூக ஆர்வலருமான ஹரி, 93, வயோதிகம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரி, கல்லுாரி நாட்களில் இருந்தே ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் இணைந்து செயல்பட்டு வந்தார்.
முதுகலை படிப்பில் சமஸ்கிருத மொழியை பயின்ற இவர், அதன்பின் தன் வாழ்நாளை சங் பரிவார் இயக்கத்துடன் இணைத்துக் கொண்டார். கேரளாவின் முதல் பிரசாரகராக திகழ்ந்த ஹரி, பின்னாளில் ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் தலைமை பதவிகளிலும் அங்கம் வகித்தார். மலையாளம் தவிர தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி உட்பட ஏராளமான மொழிகளை அறிந்த ஹரி, ஹிந்தியில் 11 புத்தகங்களையும், ஆங்கிலத்தில் இரண்டு புத்தகங்களையும் எழுதிஉள்ளார்.
இதுதவிர, பல்வேறு மொழிகளில் இருந்தும் மொழிப்பெயர்த்து, தன் தாய் மொழியான மலையாளத்தில் புத்தகங்களை பிரசுரித்துள்ளார்.
எர்ணாகுளத்தில் வசித்து வந்த நிலையில், வயோதிகம் காரணமாக சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் கூறியுள்ளதாவது:
ஹரியின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது வாழ்க்கை முழுதையும் தேசநலனுக்காகவும், மனித நேயத்துக்காகவும் அர்ப்பணித்து உள்ளார். ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்க செய்தவர். அவரது மறைவு, ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது ஆன்மா சாந்தியடைய, இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.