ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு வீட்டுத் தொடர்பில் கிடைத்த அனுபவங்கள்

ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி மக்கள் தொடர்பு இயக்கத்தை கடந்த நவம்பர் மாதம் நாடு முழுவதும் நடத்தியது. தமிழகத்திலும்
ஆர்.எஸ்.எஸ்.ஸின் தொண்டர்கள் வீடு வீடாக சென்று இயக்கத்தின் நூற்றாண்டில் சங்கம் முன்னெடுக்கும் ஐந்து விஷயங்களை பற்றிய பிரசுரங்களையும் ஆர்.எஸ்.எஸ் பற்றிய பொதுமக்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் விதமாக மூன்று புத்தகங்களையும் விற்பனை செய்தனர். அப்போது சமுதாயத்திலிருந்து நல்ல வரவேற்பும் ஆதரவும் கிடைத்தது. அதுகுறித்த சில சம்பவங்கள் வாசகர்களின் பார்வைக்காக….

ஒரு ஊரில் ஆடிட்டர் ஒருவரை சந்திக்க நேரம் கிடைத்தது. அகில பாரத பிரச்சார பிரமுகர் ஸ்ரீ சுனில் அம்பேகர் அவர்களை அழைத்து சென்ற போது அவர், அனைவரையும் தனது அறைக்கு வரவேற்று அமரவைத்து விட்டு சென்று ஒரு கவரை எடுத்து வந்து தந்தார்.

என்ன என்று கேட்டபோது ரூபாய் 5,000 உள்ளது நான் முன்பே ஏதாவது நன்கொடை கொடுக்கவேண்டும் என்று நினைத்திருந்தேன் என்றார். அதற்கு நாம், ஆர்.எஸ்.எஸ் எப்போதும் நன்கொடைகளை கேட்பதில்லை என்று சொன்னபோது, மீண்டும் வீட்டிற்குள் சென்று இன்னும் அதிகமாக பணத்தை கொண்டு தந்தார்.

அதற்கு நாம் பணம் வேண்டாம் ஆர்.எஸ்.எஸ் குறித்த செய்தியை பகிர்ந்து கொள்ள மட்டுமே வந்துள்ளோம் என்று கூறி, வாங்க மறுத்ததைக் கண்டு, அந்த ஆடிட்டர் வியந்ததோடு, பொதுவாக எல்லோரும் நன்கொடை கேட்டுதான் வருவார்கள் நீங்கள் நன்கொடை வேண்டாம் என்கிறீர்கள் என சொன்னார்.

ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் நபரின் வீட்டிற்கு சென்ற போது அவர் ஆர்.எஸ்.எஸ் என்றால் வீட்டிற்கு வரவேண்டாம் என்றார். அவரிடம் தொடர்ந்து பேசி சங்கத்தின் செயல்பாடுகளை புரிய வைத்த பின்னர், நமது பிரசுரங்களையும் புத்தகங்களையும் பெற்று கொண்டார்.

அதே ஊரில் ராணுவத்தில் பணிபுரியும் கிறிஸ்தவர் ஒருவர் நமது தொண்டர்களை பார்த்து எல்லா வீடுகளுக்கும் சென்றீர்கள், எங்களது வீட்டிற்கு வராமல் செல்லுகிறீர்களே என்ன விஷயம் என்று கேட்டார்.

அதற்கு நாங்கள் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் நூற்றாண்டு விஷயமாக வீட்டு தொடர்பு பணிக்காக சென்று கொண்டிருக்கிறோம் என்றனர்.

பின்னர் அவர் தொண்டர்களை வீட்டிற்குள் அழைத்து சென்று காபி கொடுத்து உபசரித்து, நான் மதத்தால் கிறிஸ்தவராக இருந்தாலும் நானும் பாரத குடிமகனே எனக்கும் தேசத்தின் மீது பக்தி உண்டு நீங்கள் தேச முன்னேற்றத்திற்காக உழைக்கிறீர்கள்.

அதை போன்று பிரதமர் மோடியும் உழைக்கிறார். அவரது ஆட்சி அமைந்த பின்னர் நமது நாட்டு ராணுவத்தில் எவ்வளவு மாற்றங்கள், நன்மைகள் நடந்துள்ளது என்பதை நான் நன்கு அறிவேன். நானும் உங்களை ஆதரிக்கிறேன் என்றார்.

நாகர்கோயிலில் ஒரு வீட்டில் உள்ள அரசு ஊழியரை சந்திக்க சென்றபோது அவர் தன்னைப்போல உள்ள 30 அரசு ஊழியர்களை தனது வீட்டில் அழைத்து நம்மை சந்திக்க செய்தார்.

அவர்கள் தற்போது ஹிந்து பெண்களுக்கு எதிராக உள்ள லவ் ஜிகாத் குறித்து கவலையோடு பேசி ஆர்.எஸ்.எஸ் அதற்கு என்ன செய்ய போகிறது என கேள்வி எழுப்பினார்.

அதற்கு நாம் செய்துவரும் பணிகளை எடுத்துரைத்தோம். பின்னர் அவரும் அவரது நண்பர்களும் நமக்கு எந்த முறையில் உதவ முடியுமோ அந்தவகையில் உதவுவதாக
உறுதியளித்தனர்.