உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி, அணிவகுப்பை தடுக்க, அனைத்து அடக்குமுறைகளையும் தி.மு.க., அரசு கையாண்டதாக, ஆர்.எஸ்.எஸ்., தரப்பில் வாதாடிய, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ரபு மனோகர் குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த, உச்சநீதிமன்றம் வரை சென்று சட்ட போராட்டம் நடத்திய வழக்கறிஞர்களுக்கான பாராட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. ஆர்.எஸ்.எஸ்., துவங்கப்பட்ட 1925 முதல், சீருடை அணிவகுப்பை நடத்தி வருகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடந்த, ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புகளில் வன்முறைகள் நடந்ததாக, எந்த வரலாறும் இல்லை. தமிழகத்தில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புக்கு அனுமதி வழங்கியுள்ளார். ஆனால், 2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்தது முதல், ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிதான் அனுமதி பெற வேண்டியுள்ளது. இந்த ஆண்டு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தும், தி.மு.க., அரசின் காவல் துறை அனுமதி அளிக்கவில்லை. அதனால், உச்ச நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, நவம்பர் 19ல், தமிழகத்தில், 53 இடங்களில் வெற்றிகரமாக அணிவகுப்பு நடந்தது.
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பைத் தடுக்க, அனைத்து அடக்குமுறைகளையும் காவல் துறை கையாண்டது. அணிவகுப்புக்கு அனுமதி கேட்டு கடிதம் கொடுத்த, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகளின் வீடுகளுக்கு, நள்ளிரவில் 10க்கும் அதிகமான காவலர்களுடன் சென்று, அச்சத்தை ஏற்படுத்தினர்.
உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட அனைத்து கட்டுப்பாடுகள், வழிமுறைகளை பின்பற்றினோம். ஆனாலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மீறி, தேவையற்ற கட்டுப்பாடுகளை விதித்தனர். நீதிமன்றம் அனுமதித்தும், இசைக் கருவிகளை வாசிக்கக் கூடாது என, காவல் துறை அதிகாரிகள் நெருக்கடி கொடுத்தனர்.
பொருத்தம் இல்லாத காரணங்களைக் கூறி, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் மட்டுமல்லாது, சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டவர்கள் மீதும், வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ்., எவ்வித அடக்குமுறைக்கும் அஞ்சக்கூடிய இயக்கம் அல்ல. அரசு தரும் நெருக்கடிகளை, பயிற்சியாக எடுத்துக் கொண்டு இன்னும் வேகத்துடன் பணியாற்றும் ஊழியர்களைக் கொண்ட இயக்கம். இவ்வாறு அவர் கூறினார். ஆர்.எஸ்.எஸ்., மாநில செய்தித் தொடர்பாளர் நரசிம்மன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.